கருணாநிதி உடல் நிலை: பரபரப்பை ஏற்படுத்திய நேற்றைய நிகழ்வுகள்

கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவுக்கு பின், சீராகி வருகிறது - காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தகவல்.
கருணாநிதி உடல் நிலை: பரபரப்பை ஏற்படுத்திய நேற்றைய நிகழ்வுகள்
x
கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவுக்கு பின், சீராகி வருகிறது - காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தகவல்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலை திடீர் பின்னடைவை சந்தித்து, தீவிர சிகிச்சைக்குப் பின் சீராகி வருவதாக காவேரி மருத்துவமனை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் வழக்கம் போல இயங்குவதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் குழு, அவரது உடல் நிலையை கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணாநிதி உடல்நிலை குறித்து ஆ.ராசா விளக்கம்


மருத்துவமனை அறிக்கை தொடர்பாக வெளியில் இருந்ததொண்டர்கள் மத்தியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா பேசினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை சீரானதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


திமுக தொண்டர்களை கலைக்க போலீஸார் முயற்சி - இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு

பின்னர் திமுக மூத்த தலைவர்கள் மற்றும் கருணாநிதி குடும்பத்தினர் செல்ல வழிவிடுமாறு தொண்டர்களை ஆ.ராசா கேட்டுக் கொண்டார். எனினும் கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்த தொண்டர்களை அப்புறப்படுத்த போலீஸார் முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தொண்டர்களை அப்புறப்படுத்த போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.​​ இதையடுத்து அங்கிருந்து தடுப்புகளை திமுக தொண்டர்கள் தூக்கி வீசியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட மூத்த தலைவர்கள் 

மருத்துவமனை அறிக்கையை தொடர்ந்து அன்பழகன், ஸ்டாலின், அழகிரி உள்ளிட்டோர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். தொடர்ந்து கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள், ராசாத்தியம்மாள், கனிமொழி ஆகியோர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

கருணாநிதி உடல்நிலை சீராகி வருகிறது - ஸ்டாலின் 

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதாகவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தொண்டர்களை தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்கள் குழு தொடர்ந்து கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தொண்டர்கள் எந்தவித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்