கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது - காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியீடு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை, மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கருணாநிதியின் ரத்த அழுத்தம்  சீராக உள்ளது - காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியீடு
x
கருணாநிதிக்கு கடந்த வியாழக்கிழமை சிறுநீரக தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டிலேயே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில்,  வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டது. இதனால் இரவு 1.30 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு  ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ரத்த அழுத்தம் சீரானது.

"மருத்துவ நிபுணர் குழு கண்காணிக்கிறது"

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து சனிக்கிழமை இரவு 8 மணிக்கு காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் , அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில், கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு, தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

நலமுடன் கருணாநிதி - அழகிரி 

கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததைத் தொடர்ந்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அழகிரி, ஆராசா உள்ளிட்டோர் காரில் புறப்பட்டு தங்களின் தங்குமிடங்களுக்கு சென்றனர். காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டபோது, திமுக தலைவர் கருணாநிதி தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக  அழகிரி தெரிவித்தார். 

இன்று நோய்க்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார் - வைரமுத்து

கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியை தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். கருணாநிதியின் மரபணுக்களிலேயே போர்க்குணம் கலந்திருப்பதாகவும், மக்களுக்காக பல போராட்டங்களை கண்டவர், இன்று நோய்க்கு எதிராக போராட்டம் நடத்திக்கொண்டிருப்பதாகவும் வைரமுத்து குறிப்பிட்டார். இந்த போராட்டத்திலும் அவர் வெல்ல வேண்டும் என விரும்புவதாகவும் வைரமுத்து தெரிவித்தார். 

நம்பிக்கையுடன் காத்திருக்கும் திமுக தொண்டர்கள்

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். அங்கு கிடைக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு விட்டு, சாலையோரத்தில் படுத்துக் கொண்டும் அமர்ந்துகொண்டும் தி.மு.க. தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.  தங்களின் தலைவர் கருணாநிதி பூரண உடல் நலத்துடம் மீண்டு வருவார் என்ற  நம்பிக்கையுடன் அவர்கள் காத்திருக்கின்றனர். 

திமுக தொண்டர்கள் கூச்சல் - நள்ளிரவில் பரபரப்பு

சுமார் இரவு 1 மணியளவில், லாரிகளில் இரும்பு தடுப்புகளை கொண்டுவந்த போலீசார், அவற்றை இறக்கிவைக்க முயன்றனர். 50-க்கும் அதிகமான இரும்பு தடுப்புகளை பார்த்த தி.மு.க.வினர் சப்தம் எழுப்பினர். இரும்பு தடுப்புகளை பாதுகாப்புக்காக அமைக்கப்படுவதாக கூறி, அவர்களை காவல்துறையினர் சமதானப்படுத்தினர். பின்னர் இரும்பு தடுப்புகளை கொண்டு காவேரி மருத்துவமனை முன்பு வேலிகளை அமைத்துள்ளனர்

நலம் பெற கையெழுத்து இயக்கம் 

திமுக தலைவர் கருணாநிதி முழுமையாக நலம் பெற விருப்பம் தெரிவிக்கும் வகையில்,  திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளனர். காவேரி மருத்துவமனை முன்பு ஒரு வெள்ளை துணி கட்டி அங்கு கூடியிருந்த தொண்டர்கள், தங்களின் தலைவர் விரைவில் குணமடைய வேண்டும் என்ற செய்திகளை எழுதி கையெழுத்திட்டனர். 

கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம்பெற வேண்டி சென்னை கோடம்பாக்கம்  ஏரிக்கரை மாரியம்மன் கோவிலில், ஆண்களும், பெண்களும்  கையில் விளக்கேந்தி சிறப்பு வழிபாடு நடத்தினர்.  பின்னர் பேசிய மண்பாண்ட தொழிலாளர்கள் நல சங்கத்தின் முன்னாள் தலைவர், நாராயணன்,   பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து, அனைத்து சமூகத்தினர் அர்ச்சகர் ஆகலாம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை வழங்கியவர் கருணாநிதி எனவும் அவர் 100 ஆண்டு காலம் வாழ வேண்டி இந்த வழிபாடு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் நலம் விசாரித்தவர்கள்...

காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நிர்மலா சீதாராமன், குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர், முத்தரசன், குருமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்...மேலும் எம்எல்ஏக்கள் தினகரன், தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ், பிரின்ஸ், ஹண்டே, ஜி.ராமகிருஷ்ணன், என்.ஆர். தனபாலன், சி.பி.ராதாகிருஷ்ணன், இளையராஜா, நடிகர்கள் நாசர், பிரபு, பொன்வண்ணன் ஆகியோர் நேரில் கேட்டறிந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்