விமானத்தில் தனி ஒருவர்... ஒரே ஒரு பயணிக்காக இயங்கிய விமானம்

தனியாக ஆட்டோவில் போகலாம்...காரில் போகலாம்... ஆனால் இங்கே சாதாரண நபர் ஒருவர் தனி விமானத்தில் பறந்து சென்று உச்சபட்ச மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்... இதன் பின்னணியில் நடந்தது என்ன?
விமானத்தில் தனி ஒருவர்... ஒரே ஒரு பயணிக்காக இயங்கிய விமானம்
x
இந்தியாவில் தனி விமானம் அல்லது சிறப்பு விமானத்தில் பயணிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 5 லட்ச ரூபாயாவது செலவு செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல பல்வேறு பாதுகாப்பு விஷயங்களுக்காக பல துறைகளின் அனுமதிகளைப் பெற வேண்டியிருக்கும். நடுத்தர மக்களுக்கு இது சாத்தியமா என்றால் கேள்விக்குறிதான். ஆனால் கடந்த திங்கட்கிழமையன்று திருப்பதியிலிருந்து கர்நாடக மாநிலம் கல்புர்கி நகருக்கு தனி ஒருவராக விமானத்தில் பயணம் செய்துள்ளார்  தங்கராஜ்...

2,200 ரூபாய் செலவில் விஐபிகள் பயணிப்பதை போல், அவரை தனி ஒரு ஆளாக விமானத்தில் பறக்க வைத்து  ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஸ்டார் ஏர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம். கடந்த ஜனவரி மாதம் முதல் திருப்பதியில் இருந்து கல்புர்கி நகருக்கு  பயணிகள் விமான சேவையை இந்த நிறுவனம் தொடங்கியிருந்தது. இந்த விமானத்தில் கல்புர்கியை சேர்ந்த தங்கராஜ் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2.55 மணிக்கு திருப்பதியிலிருந்து கல்புர்கி வருவதற்காக முன்பதிவு செய்திருந்தார். விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, 60 பேருக்கும் மேல் பயணிக்கக்கூடிய அந்த விமானத்தில் தங்கராஜ் ஒருவர் மட்டுமே தனி ஆளாக பயணிக்க போவதாக தெரிவித்துள்ளனர். 

முதலில் ஆச்சரியப்பட்டாலும், ஏர்லைன்சின் இந்த அறிவிப்பை கேட்டு திக்குமுக்காடி போனார் அவர்... விமானத்தில் தனியாக பயணம் செய்வதை அறிந்து மனமகிழ்ந்து போன அவர், தனது பயண அனுபவத்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.... சாதாரண பயணியாக விமானத்தில் பயணிக்க இருந்த தனக்கு, விஐபிக்கள் பயன்படுத்துவதைப் போல் தனி விமான பயண அனுபவம் கிடைத்தது சொல்ல முடியாத மகிழ்ச்சி என்றும் கூறியிருக்கிறார் அவர்... யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய பேறு இது என்றும் பகிர்ந்துள்ளார்... 

அதேநேரம் லாபத்தை காட்டிலும், பயணிகளுக்கு கொடுத்த வாக்குறுதியே முக்கியம் என்பதே தங்களின் எண்ணமாக இருந்ததால் இது சாத்தியம் என்று தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்திருக்கிறது ஏர்லைன்ஸ் நிறுவனம்... மொத்தத்தில் கல்புர்கியை சேர்ந்த தங்கராஜூக்கு இந்த விமான பயணம் அவரது வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை எப்போதும் தக்க வைத்திருக்கும்... 

தந்தி டிவி செய்திகளுக்காக கர்நாடகாவில் இருந்து செய்தியாளர் பாரதிராஜா...

Next Story

மேலும் செய்திகள்