பூபேந்திர பட்டேல் தேர்வின் பின்னணி

குஜராத்தில் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பூபேந்திர பட்டேல், அம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். யார் அவர் பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
x
குஜராத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு 15 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி ராஜினாமா செய்தது அம்மாநில அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த முதலமைச்சர் யார் என கேள்வி எழுந்த சூழலில், மாநில பாஜக  பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி பூபேந்திர பட்டேலை முதலமைச்சராக தேர்வு செய்தனர். இந்த முடிவு பலரை ஆச்சரியம் அடைய வைத்தது. காரணம் பூபேந்திர பட்டேல் இதற்கு முன்னர் அமைச்சராக இருந்தது இல்லை.. 2017ஆம் ஆண்டுதான் முதன்முறையாக எம்.எல்.ஏவாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

அமித்ஷாவின் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட காட்லோடியா(Ghatlodia) தொகுதியில் போட்டியிட்டு, மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமைக்கு சொந்தக்காரர் பூபேந்திர பட்டேல். பொறியாளரான இவர், எம்.எல்.ஏவாவதற்கு முன்னர் அகமதாபாத் நகர்ப்புற வளர்ச்சி ஆணைய தலைவராக செயல்பட்டார். இவருக்கு முதலமைச்சர் பதவி கிடைப்பதற்கு காரணம் குஜராத் முன்னாள் முதலமைச்சரும், உத்திரபிரதேச ஆளுநருமான ஆனந்தி பென் பட்டேல் என கூறப்படுகிறது. பூபேந்திர பட்டேலின் செயல்பாட்டை பார்த்து அவரது பெயரை பிரதமரிடம் பரிந்துரைத்ததாகவும், ஆனந்தி பென் பட்டேல் மீது பிரதமர் வைத்த நம்பிக்கையின் காரணமாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது

இதுஒருபக்கம் இருக்க, பூபேந்திரா சார்ந்த பட்டிடார் சமூகத்தின் வாக்குகள் தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பதால், கட்சி மேலிடம் அவரை தேர்வு செய்திருக்கலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே கொரோனா இரண்டாம் அலையை சரியாக கையாளவில்லை என ஆளும் அரசு மீது விமர்சனங்கள் இருந்தாலும், எம்.எல்.ஏ.வாக பூபேந்திரா சிறப்பாக செயல்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் பட்டேலின் அனுபவமின்மையை சுட்டிக்காட்டி சில பாஜக எம்.எல்.ஏக்கள் அவரை முதலமைச்சராக்க அச்சம் தெரிவித்தாலும், ஆட்சிக்கு எதிரான மனநிலையை குறைக்கவே, பாஜக இந்த முடிவு எடுத்திருக்கலாம் எனவும், இது பலன் தருமா என்பது அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தெரியவரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்