தேர்தல் வெற்றியால் கலவர பூமியான மாநிலம் - பற்றி எரியும் மேற்கு வங்க மாநிலம்

மேற்கு வங்க தேர்தல் முடிவுகளும் அதுதொடர்பான வன்முறைகளும் பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில் எப்போது அமைதி திரும்பும் என்ற கேள்வியும் கவலையும் ஒருசேர எழுந்துள்ளது.
தேர்தல் வெற்றியால் கலவர பூமியான மாநிலம் - பற்றி எரியும் மேற்கு வங்க மாநிலம்
x
மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான அன்று மேற்கு வங்கத்தில் அரங்கேறிய வன்முறை காட்சிகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை என்ற அறிவிப்புகள் வெளியான போது துவங்கிய வன்முறை இன்னும் விடாத பாடில்லை...நந்திகிராமில் மம்தாவுக்கு தோல்வி என்ற செய்தி வெளியான போது மீண்டும் பரபரப்பு கிளம்பவே வன்முறையும் அதிகமானது. நந்திகிராமில் இருந்த பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டது. அங்குள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. ரத்தம் வழிந்தபடி ஓடிவந்த கட்சி தொண்டர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை மேலும் எகிற வைத்தது. நந்திகிராமை தொடர்ந்து மிட்னாப்பூர், கொல்கத்தா, நார்த் பர்க்னாஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வன்முறை நீண்டது. இதற்கெல்லாம் காரணம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான் என கை காட்டியது பாஜக. கடந்த சில நாட்களாக நடந்த மோதலில் 12 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதேநேரம் பாஜக பெண் நிர்வாகிகள் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும் அக்கட்சி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தது. ஆனால் இந்த  செய்தியை காவல்துறை மறுத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகியான சீதாராம் யெச்சூரி ஆகியோர் கண்டனத்தை பதிவு செய்தனர். வன்முறை குறித்த செய்திகள் பரவ தொடங்கியதுமே மேற்கு வங்க ஆளுனரிடம் இது குறித்த அறிக்கையை கேட்டது மத்திய உள்துறை அமைச்சகம். இந்த சூழலில் தான் மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.பதவியேற்பு விழா மேடையிலேயே மாநிலத்தில் நடக்கும் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆளுநர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தனது முக்கிய பணி என உடனடியாக அறிவித்த மம்தா, சட்டம் ஒழுங்கு பொறுப்பை உடனடியாக கையில் எடுப்பதாக அறிவித்தார்.இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தையும் அறிவித்தார் அவர். அதேநேரம் மம்தாவின் பதவியேற்பு விழாவையும் புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தது பாஜக. இந்த நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். இந்த குழுவானது மேற்கு வங்கத்தின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது.
அதேநேரம் பல்வேறு வன்முறை காட்சிகள் மேற்கு வங்க கலவரத்தோடு திரித்து தவறாக செய்திகள் வெளியாவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. 
அடுத்தடுத்த வன்முறைகளால் கலவர பூமியாக காட்சி தரும் மேற்கு வங்கம் விரைவில் அமைதியான சூழலுக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்