மேற்கு வங்கத்தில் பாஜக அசுரவேக வளர்ச்சி - வலுவான இருப்பை உறுதி செய்த பாஜக

மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு முடிவுரை எழுதிவிட பாஜக மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தாலும்... மாநிலத்தில் தன்னுடைய வலுவான இருப்பை உறுதி செய்திருக்கிறது பாஜக.
மேற்கு வங்கத்தில் பாஜக அசுரவேக வளர்ச்சி - வலுவான இருப்பை உறுதி செய்த பாஜக
x
மேற்கு வங்கத்தை பொறுத்தவரையில் நீண்ட நெடுங்காலமாக முகவரி இல்லாத ஒரு கட்சியாக இருந்த பாஜக, ஆரம்பத்தில் இன்று பரம எதிரியாக பார்க்கும் திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தது. இதனால் 1998-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வென்ற பாஜக, 1999 தேர்தலில் 11.13 சதவீத வாக்குகளுடன் 2 இடங்களை வசமாக்கியது. ஆனால் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், 2006 சட்டசபைத் தேர்தலிலும் பாஜக தோல்வியையே தழுவியது. இதனையடுத்து மம்தா பானர்ஜி கூட்டணியில் இருந்து விலகியதும், கூர்கா ஜன்முக்தி மோர்ச்சாவுடன் 2009 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த பாஜக, டார்ஜிலிங் தொகுதியில் வென்றது.  இருப்பினும் கட்சியின் வாக்கு வங்கி 6.14 சதவீதமாக குறைந்தது. 2011 சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றிபெற்று இடதுசாரிகளை ஆட்சியில் இருந்து அகற்றியபோது, பாஜகவின் வாக்கு வங்கி மேலும் 4.1 சதவீதமாக குறைந்தது. ஆனால் மோடி அலையென பாஜக களமிறங்கிய 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலத்தில் 42 தொகுதிகளில் 2 தொகுதிகளை கைப்பற்றியதுடன், 17 சதவீத வாக்கு வங்கியை வசமாக்கியது. ஆனால் 2016-ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றது. வாக்கு வங்கியும் 10.6 சதவீதமாக குறைந்தது. பஞ்சாயத்து அளவில் கட்சியை வளர்க்க தொடங்கிய பாஜக இடதுசாரிகள் வாக்கு வங்கியை குறிவைத்தது. இந்துக்களை குறிவைத்து களம் இறங்கிய பாஜகவுக்கு 2019 நாடாளுமன்ற தேர்தலில்  எதிர்பார்க்காத வகையில் கைமேல் பலனாக 18 இடங்கள் கிடைத்தது. மாநிலத்தில் அசுர வளர்ச்சியை கண்ட பாஜகவின் வாக்கு வங்கியும் 40.64 சதவீதமாக அதிகரித்தது. பாஜகவை பொறுத்தவரையில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியில் அமைத்த பாஜக, தொடர்ந்து மாநிலங்களிலும் வெற்றியை வசமாக்கி ஆட்சி அமைத்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு இந்தியாவில் மேற்கு வங்கத்தை தன்வசப்படும் மாநிலமாக பார்க்கும் பாஜக, வியூகத்துடன் காய் நகர்த்த தொடங்கியது. மாநிலத்தை பொன்னான பூமியாக மாற்றிக்காட்டுவோம் என சூளுரைத்து பாஜக, சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை தன்பக்கம் இழுத்த பாஜக,  இந்துத்துவா கொள்கையுடன் வளர்ச்சியென்ற தங்களுடைய தாரக மந்திரத்தை முதன்மையாக நிறுத்தி பிரசாரம் செய்தது. மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி, மம்தா அரசுக்கு முடிவுரை எழுதிவிட வேண்டுமென பாஜக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கையில் தோல்வியிலே முடிந்தது. மாநிலத்தில் மம்தா ஆட்சியை தக்க வைத்திருக்கும் நிலையில், கடந்த தேர்தலில் 3 இடங்களில் மட்டும் வென்ற பாஜக ஜாக்பாட்டாக இம்முறை 70-க்கும் அதிகமான இடங்கள் கிடைத்துள்ளது. வெற்றிகரமான தோல்வியில், மம்தாவின் கோட்டையில் தன்னுடைய வலுவான இருப்பை உறுதி செய்துள்ள பாஜக அம்மாநில சட்டசபையில் எதிர்க்கட்சியாக அமரும் உச்சத்தை எட்டியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்