தடுப்பூசியும் இந்தியாவுக்கான சவால்களும்...!

கொரோனாவுக்கு எதிராக வெற்றிகரமாக செயல்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ள 2 தடுப்பூசிகளையும் செயல்திறனுடன் பயனாளர்களுக்கு கொண்டு செல்வதில் இந்தியாவிற்கு பல்வேறு சவால்கள் நிறைந்திருக்கிறது.
தடுப்பூசியும் இந்தியாவுக்கான சவால்களும்...!
x
உலகில் 50-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மனித பரிசோதனையில் இருந்தாலும், அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசி முறையே 90 மற்றும் 94.5 சதவிகிதம் பயனளிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெசஞ்சர் ஆர்.என்.ஏ. அடிப்படையிலான இந்த இரு தடுப்பூசிகளும் மனித செல்களையே, சொந்தமாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலை ஏற்படுத்துகிறது. இதுவரையில் பரிசோதனையில் மட்டுமே இருந்த மெசஞ்சர் ஆர்.என்.ஏ. வகையிலான தடுப்பூசிகள் கொரோனா கோரத்தால் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
 
மாடர்னா நிறுவனம் தன்னுடைய தடுப்பூசி விலையை ஒரு டோஸ்  2 ஆயிரத்து 750 ரூபாய் என்றும்   ஃபைசர் நிறுவனம்  2 ஆயிரத்து 900 ரூபாய் என்றும் அறிவித்து உள்ளன. இரண்டுமே இருமுறை போட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர்.என்.ஏ. அடிப்படையிலான இந்த தடுப்பூசிகளை தயாரிக்கும் இடம் தொடங்கி, பயனாளிக்கு செலுத்தும் காலம் வரையில் குளிரான சூழலில் பராமரித்தால் மட்டுமே செயல்திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதுதான் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு மிகவும் சவாலானது எனக் கூறப்படுகிறது.  

இதில் மாடர்னா தடுப்பூசியை மைனஸ் 36 டிகிரியில் பராமரித்தால்  30 நாட்கள் வரையில் செயல்திறனுடன் இருக்கும் என்றும் தடுப்பூசியை 4 வார கால இடைவெளியில் மனித உடலில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவே மைனஸ் 70 டிகிரியில் குளிரூடப்பட்ட ஃபைசர் தடுப்பூசி 5 நாட்கள் வரையில் செயல்திறனுடன் இருக்கும் என்றும் 21 நாட்கள் இடைவெளியில் மனித உடலில் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.   
 

தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக சரியாக செயல்பட அதனை இருப்பு வைப்பது, போக்குவரத்து மற்றும் மருத்துவமனையில் குளிர் பதன வசதி மிகவும் அவசியமாகும். தற்போது இந்தியாவில் தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைத்திருக்க 2-லிருந்து 8 டிகிரி செல்சியஸ் வரையிலான குளிர்சாதன வசதியே இருக்கிறது எனக் கூறப்படுகிறது. 


130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பயனாளர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கு போதுமான சுகாதார பணியாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நீண்ட நேரம் குளிரூட்டும் வகையிலான உறையவைக்கும் பெட்டிகளை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும்.


எய்ம்ஸ் மருத்துவர் ரந்தீப் குலெரியா கூறுகையில், இதுபோன்ற மிகவும் குறைந்த வெப்ப நிலையில் மருந்தை இருப்பு வைத்து பராமரிக்கும் கட்டமைப்பு இந்தியாவில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில்,  ஃபைசர் நிறுவனத்தின் மருந்தை வாங்கினால் அதனை எப்படி இருப்பு வைக்கலாம் என்பதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்வதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்