போதைப் பொருள் விவகாரம் - 'நிமிர்ந்து நில்' படத்தில் நடித்த நடிகை ராகினி திவேதி கைது

போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய நடிகை ராகினி திவேதி பெங்களூருவில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் திரை உலகில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
போதைப் பொருள் விவகாரம் - நிமிர்ந்து நில் படத்தில் நடித்த நடிகை ராகினி திவேதி கைது
x
ஊரடங்கிலும் கொடி கட்டிப் பறந்த போதைப் பொருள் விற்பனை பல மாநில போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. ஆன்லைனில் ஆர்டர்களை பிடித்து அதை டோர் டெலிவரி செய்யும் அளவுக்கு போதைப் பொருள் சப்ளை நடந்தேறியது. 

இதற்கெல்லாம் மையப்புள்ளியாக இருந்தது நடிகர் சுஷாந்தின் மரணத்தில் விசாரணை வளையத்திற்குள் உள்ள நடிகை ரியா சக்கரபோர்த்தி தான். அவரிடம் நடத்திய விசாரணையின் போது தான், கர்நாடக மாநிலத்தில் உள்ள போதைப் பொருள் கும்பலை பற்றிய துப்பு கிடைத்தது. உடனடியாக கர்நாடகாவில் நடந்த சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போதைப் பொருளை விதவிதமான மாத்திரைகளாக மாற்றி அதை இளைஞர்களுக்கு சப்ளை செய்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து சீரியல் நடிகையான அனிகா, முகமது அனூப், ரிஜேஷ் ரவீந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது தான் திரைப்பட தயாரிப்பாளரான இந்திரஜித் லங்கேஷ் என்பவர் போதைப் பொருள் கும்பலுடன் திரை பிரபலங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என பரபரப்பை கிளப்பினார். 

கைதான 3 பேரிடமும் நடத்திய விசாரணையில், ஆர்டிஓ அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் ரவிசங்கர் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது உறுதியானது. பார்ட் டைமாக ஓட்டலில் பார்ட்டிகளை ஏற்பாடு செய்து வரும் இவர், அதில் கிடைத்த தொடர்புகளை வைத்து திரை பிரபலங்களிடம் போதைப் பொருள்களை சப்ளை செய்து வந்துள்ளார். 

ரவிசங்கரை விசாரித்த போது தான், அவருக்கு ராகினி திவேதியுடன் உள்ள தொடர்பு வெளியானது. போதைப் பொருள்களை பயன்படுத்துவது, சப்ளை செய்வது என ராகினி திவேதியும் இதில் முக்கிய நபராக இருந்ததும் உறுதியானது. 

கர்நாடக திரை உலகில் பிரபலமான நடிகையான ராகினி திவேதி, தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் நடித்துள்ளார். 
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்ட போதிலும், அவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு  போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அங்கிருந்த நடிகை ராகினி திவேதியை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 

அதேநேரம் இந்த விவகாரத்தில் அடுத்த சிக்கலில் இருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி. 

சஞ்சனா கல்ராணிக்கும் இவருடைய ஆண் நண்பர் ஒருவருக்கும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்த நிலையில் அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதேபோல் கேரளாவிலும் போதைப் பொருள் விவகாரமும் கிளை விட்டு இருக்கிறது. தங்க கடத்தல் விவகாரத்தில் கைதான ரெமீஸ் போதைப் பொருள் விவகாரத்திலும் சிக்கியிருப்பதால் அங்குள்ள சிலரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

பாலிவுட்டை தொடர்ந்து இப்போது சிக்கலில் இருக்கிறது கர்நாடக திரை உலகமான சாண்டல்வுட். தொடர்ந்து விசாரணை நடத்தும் பட்சத்தில் நிச்சயம் பல மாநில திரை பிரபலங்கள் சிக்குவார்கள் என்றும் காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்