யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்? - சரிதா நாயரை போல கேரளாவில் மீண்டும் ஸ்வப்னா புயல்...

கேரள அரசியலில் சரிதா நாயரை போல இப்போது ஸ்வப்னா சுரேஷ் புயல் உருவாகி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்? இவரின் பின்னணி என்ன? அதிகார பலமிக்கவராக இவர் உருமாறியது எப்படி? என்பதை இப்போது பார்க்கலாம்....
யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்? - சரிதா நாயரை போல கேரளாவில் மீண்டும் ஸ்வப்னா புயல்...
x
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பலராமபுரம் தான் ஸ்வப்னாவுக்கு பூர்வீகம். ஆனால், இவரது குடும்பம் அபுதாபியில் இருந்த நிலையில் அங்கேயே பிறந்து படித்து வளர்ந்தார் ஸ்வப்னா. 

மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பன்மொழிகளிலும் தேர்ந்த இவர், ப்ளஸ் 2 வரை மட்டுமே படித்தவர். ஆனால் தோற்றமும், மொழிப்புலமையும் இவரை ஏர் இந்தியா நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியாக்கியது. 

அங்கிருந்த போதே தனக்கு பிடிக்காத அதிகாரி மீது பாலியல் புகார் கொடுத்து அதிர வைத்தார் ஸ்வப்னா. ஆனால் அது பொய் புகார் என விசாரணையில் தெரியவந்த போதிலும், தன்னுடைய அரசியல் செல்வாக்கால் வழக்கில் நேரில் ஆஜராகாமல் தப்பினார். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து அபுதாபிக்கு சென்ற அவர், மீண்டும் 2016ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்திற்கு வந்தார். அங்குள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒப்பந்த அடிப்படையில் செயலாளராகப் பணியில் சேர்ந்தார் ஸ்வப்னா. இங்கிருந்த நாட்களில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என செல்வாக்கின் உச்சத்தில் இருந்தார் இவர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் முறைகேடு புகார்கள் காரணமாக அந்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் ஸ்வப்னா. 

இருந்தபோதிலும் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் வர்த்தக மேம்பாட்டு மேலாளர் பணியில் சேர்ந்தார். தகவல் தொழில்நுட்பத் துறை செயலரும், கேரள முதல்வரின் தனிச் செயலாளருமான சிவசங்கரனுக்கு கீழ் இவருக்கு பணி என்ற நிலையில் இருவரும் நெருக்கமாகினர். 

தனக்கு சல்யூட் அடிக்காத ஒரு காவல்துறை அதிகாரியை சஸ்பெண்ட்  செய்ய சொல்லும் அளவுக்கு அதிகார போதையில் வலம் வந்தார் ஸ்வப்னா. போலியான இவருடைய புகார்களுக்கு பயந்து பலரும் இவரை நெருங்கவும் பயந்தனர். அதே நேரம் இவருடைய பந்தாவான தோற்றத்தையும், அதிகாரத்தையும் பார்த்து நெருக்கம் காட்டியவர்களும் ஏராளம். அதிகாரிகளை வளைக்க இவர் பார்ட்டிகள் கொடுத்து அவர்களை உற்சாகப்படுவது வழக்கமாம். இதனால் ஸ்வப்னா மீதான புகார்களை இதுவரை மாநிலத்தில் யாருமே கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். 

இதனிடையே தான் அமீரக தூதரகத்தின் பெயரில் தங்க கடத்தலில் சிக்கினார் ஸ்வப்னா. ஸ்வப்னாவுடன் நெருக்கம் காட்டிய சிவசங்கரன் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அரசு அதிகாரிகள், முதலமைச்சர் உள்ளிட்டோருடன் ஸ்வப்னா இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை புயலை கிளப்பியுள்ளது. இதனால் பினராயி விஜயன் ஆட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறார் இவர். 

இந்த சூழலில் நடிகை பூர்ணா வழக்கிலும் ஸ்வப்னாவின் பெயர் அடிபட்டுள்ளது. பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பலுடன் ஸ்வப்னாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே சோலார் பேனல் வழக்கில் சரிதா நாயர் காங்கிரஸ் கட்சியை ஆட்டிப்படைத்த நிலையில் இப்போது பினராயி விஜயன் ஆட்சிக்கு ஸ்வப்னா பெரும் சவாலாக வந்து சேர்ந்திருக்கிறார்... ஸ்வப்னா கைதானால் அவர் வெளியிடும் தகவல்கள் நிச்சயம் ஆட்சிக்கோ அதிகாரத்தில் இருப்போருக்கோ ஆபத்தை ஏற்படுத்துமா? என்பதே  இந்திய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்