யெஸ் வங்கி சரிவுக்கு என்ன காரணம்?

இந்தியாவின் ஐந்தாவது மிகப்பெரிய தனியார் வங்கி என பெருமை பெற்ற யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில், அதன் சரிவுக்கு என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.
யெஸ் வங்கி சரிவுக்கு என்ன காரணம்?
x
இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில், நவீன தொழில்நுட்பங்களை கொண்ட, முன்னோடி வங்கியாக திகழ்ந்தது யெஸ் வங்கி.

2004 ஆம் ஆண்டில்  ஸ்டார்ட் அப் நிறுவனம் போல ராணா கபூர், அசோக் கபூர் எனும் இரண்டு தொழில்முனைவோர்களால் தொடங்கப்பட்டது .

நிதி திரட்டுவது மிகவும் சிரமமான அந்த காலகட்டத்திலேயே 150 கோடி ரூபாய் முதலீடு திரட்டியது யெஸ்  வங்கி.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதில் இருந்து 13 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டி வந்ததால் இதன் பங்கு உச்ச பட்ச விலையைத் தொட்டது.

யெஸ் வங்கிக்கு தற்போது நாடு முழுவதும் 1,122 கிளைகளும், 1,220 ஏடிஎம் மையங்களும் உள்ளன.

தற்போது வங்கியின் கடன் சுமை 14 ஆயிரத்து 700 கோடி ரூபாயாக உள்ளது. இது வங்கியின் சொத்து மதிப்பில் 54.5 சதவீதமாகும்.

வாராகடன் நெருக்கடி இருந்த நிலையில், வங்கி விதிமுறைகள்படி நிறுவனர் ராணாகபூர் பதவி விலக  2018 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ராணா கபூர் கடந்த ஆண்டு செப்டம்பரில் பதவி விலகியதுடன், தன் வசம் இருந்த யெஸ் வங்கி பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்தார்.

நிறுவனரே , அனைத்து பங்குகளையும்  விற்பனை செய்யதால்,   தனியார் முதலீட்டு நிறுவனங்களும் யெஸ் வங்கியில் தங்களுக்கு இருந்த பங்குகளை மளமளவென விற்பனை செய்யத் தொடங்கின.

ராணாகபூர் பதவி விலகிய அன்று , யெஸ் வங்கி பங்குகள் சரிந்ததில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்த வங்கி மீதான மதிப்பு சரிந்ததுடன், பங்கு விலையும் சரிந்து 40 ரூபாய்க்கும்  கீழே சென்றது. கடந்த ஓராண்டில் மட்டும் பங்கு மதிப்பு 80 சதவீத அளவுக்கு சரிந்து விட்டன.

நிதி ஆதாரத்தை திரட்டவும், சரி செய்யவும் ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்தும் , யெஸ் வங்கி மேற்கொண்ட முயற்சிகள் எதிர்ப்பார்த்த பலனை அளிக்கவில்லை. 

இந்த நிலையில் தான், முதலீட்டாளர் நலன் மற்றும் வங்கியில் டெபாசிட் செய்துள்ள பொது மக்களின் நலன் பாதிக்க கூடாது என்பதற்காக ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. 

யெஸ் வங்கி பங்குச் சந்தைக்கு முதன் முதலில் வந்த போது, ஒரு பங்கின் விலை 45 ரூபாயாக இருந்தது. இன்றோ அதல பாதாளத்தில் ஒரு பங்கு விலை 17 ரூபாய் என  சரிந்து கிடக்கிறது.

யெஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள பொதுமக்கள்  செய்வதறியாது தவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்