டிசம்பர் 1, முதல் ஏர்டெல், வோடஃபோன் கட்டண உயர்வு : விரைவில் ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் உயரும் என தகவல்

ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் வரும் டிசம்பர் மாதம் முதல் செல்போன் சேவை கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் கட்டண உயர்வை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் 1, முதல் ஏர்டெல், வோடஃபோன் கட்டண உயர்வு : விரைவில் ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் உயரும் என தகவல்
x
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கட்டண உயர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. தொலைத்தொடர்பு கட்டணங்களை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டணங்களை உயர்த்த உள்ளன. அலைக்கற்றை அனுமதிக்கான கட்டணங்களில், சுமார் 92 ஆயிரம் கோடி ரூபாய் வரை  ஏர்டெல், வோடஃபோன்- ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிலுவை வைத்துள்ளன. நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில்,  8 சதவீத லைசன்ஸ் கட்டணத்தை தொலைத் தொடர்பு ஆணையமான ட்ராய் நிர்ணயம் செய்திருந்தது. இந்த 8 சதவீத கட்டணத்தை எதிர்த்து நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை, சமீபத்தில் ரத்து செய்த உச்ச நீதிமன்றம்  நிலுவை தொகையை உடனடியாக செலுத்த உத்தரவிட்டது. இந்த நிலையில், அரசுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை, கடன் சுமை, வருவாய் இழப்பு எல்லாம் சேர்ந்து கட்டண உயர்வுக்கு வழி வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனங்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒட்டுமொத்த வருமானத்தில்  8 சதவீத லைசன்ஸ் கட்டணத்தை 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ள நிலையில்,  தொலைபேசி நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவித்துள்ளன. எந்த சேவைக்கு, எவ்வளவு கட்டண உயர்வு என நிறுவனங்கள் அறிவிக்கவில்லை என்றாலும், இதனால் அடுத்த மாதத்தில் இருந்து தொலைபேசி சேவைகளுக்கான செலவுகளில்  கூடுதல் சுமை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்