உலக அளவில் பிரபலம் ஆக நினைத்த இளைஞர்கள் : போலீஸை பிராங்க் செய்து வசமாக சிக்கினர்

பெங்களூருவில் பேய் வேடமிட்டு இரவில் பொதுமக்களை பிராங்க் செய்த 7 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
உலக அளவில் பிரபலம் ஆக நினைத்த இளைஞர்கள் : போலீஸை பிராங்க் செய்து வசமாக சிக்கினர்
x
பெங்களூருவில் பேய் வேடமிட்டு இரவில் பொதுமக்களை பிராங்க் செய்த 7 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பிராங்க் என்ற பெயரில் நடக்கும் விபரீத விளையாட்டு. சாலையில் செல்பவர்களை ஏமாற்றுவது, பயமுறுத்துவது என சமூக வலைதளத்தில் உலவும் பிராங்க் வீடியோக்கள் ஏராளம். யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர்கள், விதவிதமான வீடியோக்கள் செய்து இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

சமீபகாலமாக அவர்கள் பதிவிட்ட வீடியோக்களுக்கு சரியாக வரவேற்பு கிடைக்காததால் , புது முயற்சியாக பொதுமக்களை பிராங்க் செய்து அதை இணையத்தில் பதிவேற்ற முடிவெடுத்தனர். சரி பொதுமக்களை எந்த விதத்தில் பிராங்க் செய்தால் , வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகும் என யோசித்த இளைஞர்களுக்கு , வெளிநாடுகளில் பேய் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டி பிராங்க் செய்பவர்களுக்கு, அதிக பாலோவர்ஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதே பாணியை இங்கு கடைபிடித்த இளைஞர்கள் , அதிகாலையில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் உறங்கும் பொதுமக்களை மிரட்டி பிராங்க் செய்துள்ளனர். தொடர்ந்து இது போன்ற சம்பவம் அங்கு அரங்கேறியதால் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிகாலை 2.30 மணியளவில் யஸ்வந்பூர் என்ற பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது இளைஞர்கள், போலீஸையும் விட்டு வைக்காமல் பிராங்க் செய்து வசமாக மாட்டிக் கொண்டனர். இதனையடுத்து, 7 இளைஞர்கள் மீது மக்களை அச்சுறுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபலம் அடையும் நோக்கில் பொதுமக்களை அச்சுறுத்தினால், கைது செய்யப்படுவது உறுதி என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது இந்த சம்பவம்.

Next Story

மேலும் செய்திகள்