"அயோத்தி தீர்ப்பு - முழு விபரம்"

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
x
வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வெளியிடுகிறோம் என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி,  அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசியல் சட்டம் நிலை நாட்டப்பட வேண்டும் என  தீர்ப்பினை வாசித்தார். ஆயிரத்து 45 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் முக்கிய விபரங்களை படிக்க 30 நிமிடங்கள் ஆகும் என நீதிபதிகள் கூறினர்.

சன்னி பிரிவுக்கு எதிரான வக்பு வாரிய மனுவை தள்ளுபடி செய்ததுடன்,  மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிடுவது சரியானது அல்ல என்றும் குறிப்பிட்டனர்.

நிலத்தின் உரிமை வெறும் நம்பிக்கை அடிப்படையில் கோர முடியாது என்றும், ஆங்கிலேயர் வருகைக்கு முன்னே சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தியுள்ளதாகவும் கூறினர்.

மசூதி கட்டப்பட்ட இடத்தில் கட்டுமானம் இருந்துள்ளதாக தொல்லியல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும், ஏற்கனவே இருந்த கட்டிடம்  இஸ்லாமிய பாணியில் இல்லை எனவும் கூறினர்.

அந்த நிலத்தை அலகாபாத்  உயர்நீதிமன்றம் 3 பங்காக பிரித்து அளித்த தீர்ப்பு தவறு என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என இந்துக்கள் நம்புகிறார்கள் என்பதால் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பு அளித்தனர்.

பாபர் மசூதி இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர். கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும்,  அயோத்தியிலேயே மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அல்லது  உத்தரப்பிரதேச அரசு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

5 ஏக்கர் நிலத்தையும் சன்னி வக்பு வாரியத்திற்கு தர வேண்டும் என்றும், அந்த இடத்தில் மசூதி கட்டுவதற்கு சன்னி வக்பு வாரியத்திற்கு அனைத்து உரிமைகளும் அளிக்கப்படுவதாக கூறினர்.

சர்ச்சைக்குரிய நிலம் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், நடுநிலையை காக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கு உள்ளதாகவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்