தனியார் கையில் ரயில்...

இந்தியாவில் தனியார் துறை மூலம் பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
x
இந்தியாவில் முதல் ரயில்வே சேவை 1853 ஆம் ஆண்டு மும்பை மற்றும் தானே இடையே தொடங்கியது.  அதன் பின்னர் 1856 ஆம் ஆண்டு சென்னை ராயபுரம் - வியாசர்பாடி இடையே பயணிகள் ரயில் இயக்கம் தொடங்கியது. அதே ஆண்டு பெரம்பூரில் ரயில் பெட்டி தொழிற்சாலை உருவானதை தொடர்ந்து. இந்திய ரயில்வே சூடு பிடிக்க தொடங்கியது. 1925 ஆம்ஆண்டு மும்பையில் முதல் மின்சார ரயில், வெள்ளோட்டம் விடப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய ரயில்வே பல முன்னேற்றங்களை கண்டு அதிநவீன சொகுசு மெட்ரோ ரயில் வரை வளர்ந்துள்ளது. இந்தியாவில் 1 லட்சத்து 21ஆயிரத்து 407 கிலோமீட்டர் நீள இருப்புப்பாதை உள்ளது. 7 ஆயிரத்து 349 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 810 கோடி மக்கள் பயணம் மேற்கொள்கிறார்கள்... தினசரி 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். ஆண்டு ஒன்றுக்கு 110 கோடி டன் சரக்கு கையாளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லாத ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என மொத்தம் 13,100 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் ரயில்வே வருமானத்தை பெருக்க பல்வேறு வழிமுறைகளை ரயில்வே வாரியமும், மத்திய அரசும் திட்டமிட தொடங்கின.ரயில்வே துறையின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது, சீரமைப்பது குறித்து கடந்த 2014-ஆம் ஆண்டு விவேக் தேவ்ராய் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு , 2015ஆம் ஆண்டு 300 பக்க அறிக்கையை அளித்து பல்வேறு முக்கிய பரிந்துரைகளையும் தெரிவித்தது. அதன்படி, மண்டல பொதுமேலாளர்கள் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க அதிகாரம் அளித்தல், ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தேவையில்லை, பயணிகள் ரயிலை தனியார் இயக்குவது, வருவாயை பெருக்க ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற அதிரடி முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன

அதன் தொடர்ச்சியாக பயணிகள் ரயிலை, தனியார் இயக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் முதல் முயற்சியாக டெல்லி - லக்னோ இடையே ஓடும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஐஆர்சிடிசி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சேவை அடுத்த மாதம் நான்காம் தேதி தொடங்கவுள்ளது. அதற்கான முன்பதிவு தற்போதே தொடங்கியுள்ள நிலையில், கட்டணம் சற்று அதிகம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஃப்ளக்ஸி கட்டண முறை அமல் படுத்தப்பட்டுள்ளதால், கட்டண விதிகளில் மாற்றமும் உள்ளது. ரயில் கட்டணத்தோடு, உணவு கட்டமும் இந்த ரயில்களில் வசூலிக்கப்படுகிறது. 

நாட்டின் முதல் தனியார் ரயில் இயங்க தொடங்குவதற்கு முன்பே அந்த ரயில் சேவை வெற்றி பெறும் என்ற முடிவுக்கு வந்துள்ள ரயில்வே வாரியம் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் பிற நகரங்களை இணைக்கும் வகையில் தனியார் பயணிகள் ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள், அவர்களுக்கு லாபம் பெறும் வழித்தடத்தை தேர்வு செய்வதோடு கட்டணத்தையும் நிர்ணயித்து கொள்ளலாம். ஒரு வழித்தடத்தில் எத்தனை முறை ரயில்களை இயக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்து கொள்ளலாம். 

முதற்கட்டமாக மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் செகந்தராபாத்தில் சில வழித்தடங்கள் தனியாருக்கு வழங்கப்படவுள்ளன. சென்னை-பெங்களூரு, சென்னை-கோவை, சென்னை- மதுரை உள்ளிட்ட 14 இன்டர் சிட்டி வழித்தடங்களும் தனியார் மயமாக்கப்படவுள்ளன. இதுமட்டுமின்றி, சென்னை - டெல்லி, சென்னை - மும்பை, சென்னை - ஹவுரா உள்ளிட்ட பத்து நீண்ட தூர  பயண வழித்தடங்களும் தனியார் மயமாக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்