"செப். 21 -ல் அமெரிக்கா புறப்படுகிறார் பிரதமர் : செப். 27 -ல் ஐ. நாவில் பிரதமர் மோடி உரை"

நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி, வருகிற 21 -ம் தேதி, அமெரிக்காவுக்கு செல்கிறார். 27 - ம் தேதி, ஐ. நா சபையின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்திக்கிறார்.
x
ஜூனில் ஜப்பான் - ஆகஸ்ட்டில் பூடான் , பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்,  பஹ்ரைன் நாடுகளில் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் நரேந்திரமோடி, இந்த மாதம்  4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ரஷியா சென்றிருந்தார்.

இப்போது, வருகிற 21 ம் தேதி, பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.முதல் கட்டமாக ஹூஸ்டன் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, 22 ம் தேதி, டெக்சாஸ் மாகாணத்தில் வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள " ஹவுடி மோடி" என்ற சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க உள்ளார். அப்போது, இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து, முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். 

வருகிற 24 - ம் தேதி, தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக " தலைமையின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதன்பின்னர், நியூயார்க் நகரில் வருகிற 27 ம் தேதி நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உலக தலைவர்கள் மத்தியில்  உரையாற்றுவார்.

ஐ. நா சபையில் உரையாற்றி விட்டு, அன்று இரவே அமெரிக்காவில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி, தாயகம் திரும்புவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியின் அமெரிக்க  பயணம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்