நீர் மேலாண்மை திட்டத்தில் அசத்தும் இஸ்ரேல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக இஸ்ரேல் நாட்டுக்கு செல்ல உள்ள நிலையில் அங்குள்ள நீர் மேலாண்மை திட்டம் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
நீர் மேலாண்மை திட்டத்தில் அசத்தும் இஸ்ரேல்
x
அமெரிக்கா, லண்டன், துபாய் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேல் நாட்டில் உள்ள நீர் மேலாண்மை திட்டம் குறித்து அறிந்து கொள்வதற்காக அடுத்த கட்டமாக அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

வறட்சியான நாடு என அடையாளம் காணப்பட்ட இஸ்ரேல் நீர் மேலாண்மை திட்டத்தில் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது எப்படி என இப்போது பார்க்கலாம்.

பொதுவாக தண்ணீரை சேமிக்க சரியான திட்டமிடல் அவசியம். அதனை திறம்பட செய்து கொண்டிருக்கிறது இஸ்ரேல். காரணம் இங்குள்ள கலிலீ என்ற ஒரு நன்னீர் ஏரியை மட்டுமே பயன்படுத்தி வருடத்தின் எல்லா நாட்களுக்கும் தண்ணீரை சேமிக்கிறார்கள். தண்ணீரை சேமிப்பதோடு மட்டுமின்றி விவசாயத்திலும் புரட்சியை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

வருடத்தின் மூன்று மாதங்களுக்கு மட்டும் பெய்யும்
மழை நீரை கலிலீ ஏரியில் சேமித்து, அதனை வருடம் முழுவதும், குழாய்கள் மூலம் பயன்படுத்துகின்றனர். நாட்டில் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களையும் ஒன்றிணைக்குமாறு தேசிய தண்ணீர் விநியோக திட்டம் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

குடிநீரை பயன்படுத்தும் பண்ணைகள், வீடுகள், அலுவலகங்களில் தண்ணீர் மீட்டர் பொருத்தப்பட்டு தண்ணீர் பயன்பாடு துல்லியமாக கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தேவையில்லாமல் தண்ணீரை பயன்படுத்துவதை பலரும் குறைத்துக் கொள்கின்றனர். 

மேலும் கழிவுநீரை சுத்திகரித்து அதை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்துவதிலும் இஸ்ரேல் தனித்துவம் பெற்றுள்ளது. மேலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திலும் இஸ்ரேல் முன்னோடியாக உள்ளது.

விவசாயத்திற்கு சொட்டு நீர் மற்றும் நுண்ணீர் பாசன முறைகள் மட்டுமே பயன்படுத்துப்படுகின்றன. நீர் ஆவியாவதை தடுக்க நிழல் வலைகள், பசுமை வீடு முறை, மண்ணில்லா விவசாய முறைகளும் திறம்பட செயல்படுத்தப்படுகிறது. இதனால் இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோன்ற சரியான திட்டமிடல்களால் இஸ்ரேல் உலக நாடுகளுக்கு ஒரு முன் உதாரணமாகவே திகழ்கிறது...

Next Story

மேலும் செய்திகள்