உணவில் பல்லி விழுந்து இருந்ததாக கூறி தொடர் மோசடி : ஹோட்டல் உரிமையாளர்களிடம் பணம் பறித்தவர் கைது
உணவில் பல்லி விழுந்து இருந்ததாக கூறி, ஹோட்டல் உரிமையாளர்களிடம் தொடர்ந்து பணம் பறித்து வந்த நபரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குந்தக்கல் ரயில் நிலையத்தில் உள்ள கடையில் மும்பையை சேர்ந்த சுந்தர்பால் என்பவர், வெஜிடபிள் பிரியாணி வாங்கி சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே மீண்டும் அங்கு வந்த சுந்தர்பால் பிரியாணியில் பல்லி இருந்ததாகவும் அதனை சாப்பிட்டதால் தனக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து கடையின் உரிமையாளர் இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் எனக்கூறி 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இதனை அறிந்த ரயில்வே போலீசார் சுந்தர்பாலை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது, ஜபல்பூர் ரயில் நிலையத்தில் சமோசாவில் பல்லி இருந்ததாக கூறி பணம் பறித்த ஒருவரை போலீசார் கைது செய்த வீடியோவை போலீசாரிடம் ரயில்வே ஊழியர் ஒருவர் காண்பித்துள்ளார். அதனை பார்த்த போலீசார் அந்த வீடியோவில் இருந்தவரும் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட சுந்தர்பாலும் ஒருவரே என்று கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ள ஹோட்டல்களில் சுந்தர்பால் இதேபோல் மோசடியில் ஈடுபட்டு பணம் பறித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story