இஸ்ரோ புதிய சாதனை

இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட PSLV C-44 ராக்கெட் மற்றும் மைக்ரோசாட்- ஆர் மற்றும் கலாம்சாட் செயற்கைகோள்களின் சிறப்பம்சங்கள் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு....
இஸ்ரோ புதிய சாதனை
x
PSLV C-44 ராக்கெட், இஸ்ரோவின் PSLV ரகத்தின் 46வது ராக்கெட் ஆகும். செயற்கை கோள்களின் சுற்று வட்டப்பாதையை அதிகரிக்கும் வகையிலான PSLV - DL என்ற புதிய தொழில்நுட்பம் முதல் முறையாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகளால் தயார் செய்யப்பட்ட MICROSAT - R என்ற செயற்கைகோளும், சென்னையை சேர்ந்த SPACE KIDZ INDIA என்ற அமைப்பை சேர்ந்த மாணவர்கள் வெறும் 12 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கிய KALAMSAT V2 என்ற செயற்கைகோளும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 

பூமியில் இருந்து 274 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புவி வட்டப்பாதையில் MICROSAT - R செயற்கை கோளும், 450 கிலோ மீட்டர் தூரத்தில் KALAMSAT V2 செயற்கைகோளும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 740 கிலோ எடை கொண்ட MICROSAT - R செயற்கைகோள், நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு பயன்படும். ஹாம் ரேடியோ சேவைகளுக்கான தகவல் தொடர்பு செயற்கைகோளாக உருவாக்கப்பட்டுள்ள KALAMSAT V2, புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள மிகவும் எடை குறைவான செயற்கைகோள் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் மொத்த எடை வெறும் 1.2 கிலோ தான். 

வழக்கமாக விண்வெளி குப்பையாக மாறும் ராக்கெட்டின் நான்காம் நிலையில், இதுவரை செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டது இல்லை. ஆனால் சோதனை முயற்சி அடிப்படையில் முதல் முறையாக PSLV C-44 ராக்கெட்டின் 4-வது நிலையில் KALAMSAT V2 செயற்கைகோள் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தி இஸ்ரோ மற்றொரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்