கிடைக்காத புதிய கார்டு - செயல்படாத பழைய கார்டு : பணம் எடுக்க முடியாமல் மக்கள் திண்டாட்டம்

சிப் பொருத்தப்பட்ட புதிய ஏடிஎம் கார்டுகள் கிடைக்காததால் பணம் எடுக்க முடியாமல் திண்டாடி வருவதாக வங்கி வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிடைக்காத புதிய கார்டு - செயல்படாத பழைய கார்டு : பணம்  எடுக்க முடியாமல் மக்கள் திண்டாட்டம்
x
ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர்  சிப் பொருத்தப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு மட்டுமே சேவைகள் கிடைத்து வருவதால், மக்களுக்கு கடும் பண நெருக்கடி உருவாகியுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் இதுவரை புதிய கார்டுகள் அளிக்காத நிலையில், பழைய கார்டுகளுக்கான சேவையும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் ஏ.டி.எம் களில் பணம் எடுக்க முடியாமலும்,  பொருள் வாங்க  முடியாமலும் மக்கள் கடந்த இரண்டு நாட்களாக புதிய  குழப்பத்தினை சந்தித்து வருகின்றனர்.
 
பணமதிப்பு நீக்கத்தின்போது, ஒரே நாளில், கையில் இருக்கும் பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டதுபோல,  இப்போது கார்டுகளை பயன்படுத்த முடியாமல் இந்த புதிய  நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்கின்றனர். புதிய கார்டு வாங்க வேண்டும் என்றால்  கணக்கு வைத்துள்ள கிளைகளுக்கு செல்ல வேண்டும் என வங்கிகள் அலையவிடுவதால் இந்த குழப்பம் உடனடியாக தீராது என்றும், அனைவருக்கும் சிப் வைத்த கார்டு அளிக்கும் வரை பழைய கார்டுகளின் சேவை தொடர வேண்டும் என்றும் மக்கள் விரும்புகின்றனர்.

இது தொடர்பாக அகில  இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எஸ் வெங்கடாசலம் கூறுகையில், மேக்னடிக் ஸ்டிரைப் எனும் காந்தப் பட்டை கொண்ட கார்டுகளின் தகவல்களை ஸ்கிம்மர் கருவி மூலம் எளிதாக திருடப்பட்டு வந்ததால், அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மின்னணு சிப் கார்டுகளை வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி 2 ஆண்டுகளாகவே சொல்லி வருகிறது. இந்தியாவில் சுமார் 60 கோடி டெபிட் கார்டுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை மாற்றி கொடுப்பது  பெரும் பொருட்செலவு என்பதால் வங்கிகள் காலதாமதம் செய்து வந்தன. இப்போது  காலநீட்டிப்பு இல்லை என தெரிந்ததும்  அவசர அவசரமாக புதிய கார்டுகளை வழங்கி வருகின்றன. இந்தியா போன்ற கிராமப்புற மக்கள் நிரம்பிய  நாட்டில் ஒரே நாளில் எல்லா மாற்றங்களை கொண்டு வர முடியாது என்பதை அரசு இன்னமும் உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றார்.

எது எப்படியோ, புதிய கார்டு கிடைக்காமல்,  பழைய கார்டுகளையும்  பயன்படுத்த முடியாமல் புதிய சிக்கலை அனுபவித்து வரும் சூழலில், உடனடி தீர்வு என்றால் பழைய கார்டுகளுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் கருத்தாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்