பர்தாவை கழற்ற மறுத்த இளம்பெண்ணுக்கு 'நெட்' தேர்வெழுத அனுமதி மறுப்பு

கோவாவில் பர்தாவை கழற்ற மறுத்த இளம்பெண்ணுக்கு நெட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பர்தாவை கழற்ற மறுத்த இளம்பெண்ணுக்கு நெட் தேர்வெழுத அனுமதி மறுப்பு
x
சபீனா கான் சவுடாகர்  என்கிற 24 வயது  இளம்பெண்  கோவாவில் பல்கலைக் கழக மானிய குழுவால் நடத்தப்படும் நெட் தேர்வு எழுதுவதற்கு கடந்த 18 ம் தேதி பனாஜி  தேர்வு மையத்துக்கு சென்றுள்ளார். அவரது அடையாள அட்டைகளை சோதனை செய்த தேர்வு மேற்பார்வையாளர்கள், பின்னர் பர்தாவை கழற்றும்படி கூறியுள்ளனர்.  

இது தனது மத நம்பிக்கைக்கு எதிரானது என எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண், பர்தாவை கழற்ற மறுத்ததுடன், தேர்வு அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளார். ஆனால் பர்தாவை அகற்றினால்தான் தேர்வுக்கு அனுமதிக்க முடியும் என அதிகாரிகளும் கூறியுள்ளனர். இதனால் தேர்வு எழுத முடியாத அவர்,  இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார்.

அதில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது யுஜிசி-யின் விதிகளைப் படித்தேன் என்றும், அதில் பர்தா குறித்தோ அல்லது உடை கட்டுப்பாடுகள் பற்றியோ குறிப்பிடப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கு முன்னர் நெட் தேர்வு எழுதியபோது இப்படியான கட்டுப்பாடுகள் இல்லை என்றும் எந்த விதியின் அடிப்படையில் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது என்றும் அந்த கடிதத்தில் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பெயர் குறிப்பிட விரும்பாத கோவா கல்வித் துறை உயர் அதிகாரி, பர்தாவுக்கு மட்டுமல்ல, திருமணமான இந்து பெண்கள் மங்கலநாண் அணிந்து வருவதிலும் கட்டுப்பாடுகள் கடை பிடிக்கப்படுகின்றன என்றும், தேர்வு  வெளிப்படையான முறையில் நடைபெற உறுதி செய்யும் வகையில் கடுமையான விதிகள் யு.ஜி.சி.யால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதை அதிகாரிகள் பின்பற்றுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்