காடு, மலை, நதி கடந்து ஒரு பயணம் - கல்வி கற்றுத் தருவதில், ஆசிரியையின் அர்ப்பணிப்பு

காடு, மலை, ஆற்றைக் கடந்து, பாடம் கற்பிக்கும் இந்த ஆசிரியரின் சாதனைப் பயணத்தைப் பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...
காடு, மலை, நதி கடந்து ஒரு பயணம் - கல்வி கற்றுத் தருவதில், ஆசிரியையின் அர்ப்பணிப்பு
x
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள அம்புரி (AMBOORI) கிராமத்தை சேர்ந்த இவர், குன்னதுமலா பகுதியிலுள்ள மலை கிராம பள்ளியில் 16 ஆண்டுகளாக ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். தமது வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்லும் இவரது பயணம் சாதாரணமானதல்ல... இவர் பெயர் உஷா குமாரி... 

நான்காம் வகுப்பு வரை இருக்கும் அந்த பள்ளிக்கு, உஷாகுமாரி மட்டும் தான் ஆசிரியை. 14 மாணவ-மாணவிகள் இவரிடம் பாடம் படிக்கின்றனர். உஷாகுமாரியின் அன்றாட பள்ளிப் பயணம் காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.  தமது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கும்பிக்கா காவடு என்ற ஆற்றுப் பகுதிக்கு செல்கிறார். அங்கிருந்து ஆற்றின் மறுகரைக்கு செல்ல படகை பயன்படுத்துகிறார். அந்த சிறிய படகை உஷாகுமாரியே ஓட்டுகிறார்.

அவர் படகில் மறு கரைக்கு சென்றடையும் வேளையில் அங்கு சில மாணவ-மாணவிகள் அவருடைய வருகையை எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர். அவர்களுடன் காட்டுப் பாதை வழியாக பள்ளிக்கூடத்தை நோக்கி பயணிக்கிறார். பாறைகள், புதர்கள், ஒற்றையடி பாதை என உஷாகுமாரியின் நடை பயணம் கடினமானது. சில இடங்களில் மலைப்பாதையை கடப்பதற்கு ஊற்றுகோல் தேவைப்படுகிறது. ஆனாலும், மாணவ-மாணவிகள் துணையோடு உற்சாகமாக பயணம் மேற்கொண்டு பள்ளிக்கு சென்று பாடம் நடத்தி வருகிறார்.

மலைப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் பள்ளிப்படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் 1999-ம் ஆண்டு, கேரளாவில் ஒரே ஒரு ஆசிரியர் கொண்ட பள்ளிகள் இரண்டு இடங்களில் தொடங்கப்பட்டன. அதில், இந்தப்  பள்ளியும் ஒன்று. ஆரம்பத்தில் பள்ளிக்கென்று கட்டிடம் இல்லை. வீட்டு திண்ணைகளிலும் அகன்ற பாறைகளிலும் மாணவ-மாணவிகளை அமர செய்து பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். 

அப்போது, மாணவர்கள் யாரும் படிக்க ஆர்வம் காட்டவில்லை. அவர்களுடைய பெற்றோரும், பிள்ளைகள் கல்வியை பெற வேண்டும் என்று விரும்பவில்லை. விவசாய பணிகளில் தான் தங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்திக்கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று கல்வியின் முக்கியத்துவத்தை, உஷா குமாரி விளக்கியுள்ளார். ஆனால், யாரும் காது கொடுத்து கேட்கவில்லை.

அப்போது, பஞ்சாயத்து சார்பில் இரண்டு கட்டிடங்கள் கட்டிக்கொடுத்தனர். கடும் போராட்டத்திற்கு பிறகு மாணவர்களை ஒவ்வொருவராக பள்ளிக்கு அழைத்துவந்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் 11 பேர் படித்த நிலையில், 3 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். 

உஷாகுமாரி இரவு 8 மணி அளவில் தான் வீடு திரும்புகிறார். மழைக்காலங்களில் பள்ளிக்கு செல்வது சவாலான விஷயம். பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையாக மட்டுமல்லாமல் மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளும் நலம் விரும்பியாகவும் செயல்பட்டு வருகிறார். மதிய உணவுடன் பால், முட்டையும் வழங்கி வருகிறார். அவருக்கு கல்லூரி நிர்வாகம் ஒன்று உதவி செய்து வருகிறது. 

உஷாகுமாரிக்கு சில சமயங்களில் மூன்று, நான்கு மாதங்கள் கழித்தே சம்பள பணம் கைக்கு கிடைக்கிறது. எனினும் தமது சொந்த பணத்தில் இருந்து மாணவர்களுக்கு பால், முட்டை வாங்கிக் கொடுக்க அவர் தவறுவதில்லை. 

தம்மால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். 

எழுத்தறிவித்தவன் இறைவன்... இவர், அனைவராலும் வணங்க கூடிய இறைவனாகவே காட்சி தருகிறார்... 

Next Story

மேலும் செய்திகள்