உப்பில் கலந்திருக்கிறது பிளாஸ்டிக் நுண்துகள் - மும்பை ஐ.ஐ.டி. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

2018ம் ஆண்டில் வெளியான அதிர்ச்சியான ஆய்வு முடிவு ஒன்றை, விவரிக்கிறது இந்த தொகுப்பு
உப்பில் கலந்திருக்கிறது பிளாஸ்டிக் நுண்துகள் - மும்பை ஐ.ஐ.டி. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
x
தினமும் உணவில் பயன்படுத்தப்படும் உப்பில், பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கிறது என்பது தான், இந்தாண்டின் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு,  இதனைச் சொன்னது மும்பை ஐ.ஐ.டி

உலகம் முழுவதும், சமையலில் அத்தியாவசியப் பொருளாக, 'உப்பு' பயன்படுத்தப்படுகிறது. சீனா, அமெரிக்காவிற்கு அடுத்து, உப்பை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. 

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பின் அளவு, வருடத்திற்கு சுமார் 26 மில்லியன் மெட்ரிக் டன்கள். இதில் தான், நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. காரணம் என்ன தெரியுமா...?

தெரிந்தோ தெரியாமலோ, மிகப்பெரும் குப்பைத் தொட்டியாக, கடல் மாறிவிட்டது. 

பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களில், மிகக் குறைந்த அளவு மட்டுமே மறுசுழற்சிக்கு செல்கிறது. அதில், பெரும் பகுதி கடலையும், நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளது. பெரும்பாலான பிளாஸ்டிக் குப்பைகள் கடலில், சேர்கின்றன... 

இவை, காலப்போக்கில் மிக நுண்ணிய துகள்களாக மாறுகின்றன. கண்களுக்குத் தட்டுப்படும் பெரிய பிளாஸ்டிக் பொருள்களை அகற்றிவிடலாம்... ஆனால், இந்த நுண்ணிய துகள்களை, நீரிலிருந்து பிரித்தெடுப்பது முடியாத காரியம்...

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் பொருள்களால் கடல்வாழ் உயிரினங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. இதனால், மனிதர்களுக்கு பாதிப்பில்லை என்று நினைத்தால், அது தவறு... உப்பில் கலந்து விட்டது பிளாஸ்டிக்... 

மும்பை ஐ.ஐ.டி-யின் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்தவர்கள், இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் 6 நிறுவனங்களின் உப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த ஆய்வின் முடிவு, அதிர்ச்சியில் உறைய வைத்தது. 

ஒரு கிலோ உப்பில், சுமார் 63 புள்ளி 76 மைக்ரோ கிராம் அளவிற்கு நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்...

உப்பில் எப்படி வந்தது பிளாஸ்டிக்...?

கடல் நீரை உப்பளங்களில் தேக்கி வைத்து ஆவியாக்குதல் மூலமாக உப்பை தயாரிப்பது, உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கிறது. இந்த முறையில், கடல் நீரை உப்பளங்களில் தேக்கி வைக்கின்றனர். சூரிய ஒளியினால் நீர் ஆவியாகி உப்பு மட்டும் இறுதியாகக் கிடைக்கிறது. 

தற்போது, கடல் நீர் மாசுபட்டிருப்பதால் நீரில் கலந்திருக்கும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் உப்போடு தங்கி விடுகின்றன. அதன் பிறகு, உப்பு சுத்திகரிப்பு செய்யப்படுவதில்லை... அப்படியே பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. 


ஒவ்வொரு நாளும் ஒருவர் சராசரியாக 5 கிராம் உப்பை எடுத்துக்கொள்கிறார்... இதன் மூலம், ஒரு வருடத்தில் அவர் உட்கொள்ளும் நுண்ணிய பிளாஸ்டிக் பொருள்களின் அளவு 117 மைக்ரோ கிராம் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

"கடலிலிருந்து பெறப்படும் உப்பில், நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிரூபித்துள்ளன, தற்போது மும்பை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். 

ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு குப்பை லாரி அளவு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலந்துகொண்டிருக்கின்றன. கடந்த இருபது வருடங்களில் மட்டும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசு, இரு மடங்கு அதிகரித்துள்ளது. 

உப்பைத் தின்றால், தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்... இதனை உணரத்தான் வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்