'கர்நாடகாவின் வீரப் பெண்மணி'யின் கதை
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கர்நாடக காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள, சரித்திர பின்னணி கொண்ட தனிப் படை குறித்துப் பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...
கர்நாடக காவல் துறையினரால், சமீபத்தில் உருவாக்கப்பட்டது தான், "ஒபாவ்வா படை..." இதில், சிறப்பு பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் உள்ளனர்.
சித்ர துர்காவை ஆண்ட மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட பெண்கள் படையின் பெயரும் "ஒபாவ்வா" தான். தற்போது, அதே பெயரில், பெண்களுக்கு எதிராக ஏற்படும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தப்படை இயங்கிக் கொண்டிருக்கிறது.
இதில் இடம் பெற்றுள்ள 45 இளம் பெண் காவலர்களுக்கு, 21 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தற்காப்பு நுணுக்கங்களும் கற்றுத் தரப்பட்டுள்ளது.
இதில், ஐந்து குழுக்கள் உள்ளன. இந்த படை, பெண்களுக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
இதன் சரித்திர பின்னணி என்ன தெரியுமா?
18ம் நூற்றாண்டின் மத்தியில் சித்ரதுர்கா, மதகரி நாயக்கர் என்பரால் ஆளப்பட்டது. இவரது கோட்டைக் காவலாளி ஒருவரின் மனைவி தான் ஒபவ்வா. 1779ம் ஆண்டு வாக்கில், மைசூரைத் தலைநகராக கொண்டு ஆண்டுவந்த ஹைதர் அலியின் படைகள், இந்தக் கோட்டையை முற்றுகையிட்டன.
குன்றின் மீது இருந்த, இந்த கோட்டையின் உள்ளே நுழைய சிரமப்பட்ட ஹைதரின் படைகள், அதில் இருந்த ஒரு சிறு துளை வழியே உள்ளே நுழைய முடிவெடுத்தன. இதில், ஒரு சமயத்தில், ஒருவர் மட்டுமே நுழைய முடியும்.
இந்த ஆபத்தை உணர்ந்த மதகரி நாயக்கர், அதன் அருகே ஒபவ்வாவின் கணவரை காவலுக்கு நியமித்தார்.
ஒருநாள், மதிய உணவுக்காகத் வீட்டுக்கு வந்த ஒபவ்வாவின் கணவர், தண்ணீர் எடுத்து வருவதற்கு தமது மனைவியை அனுப்பினார். தண்ணீர் பிடிக்க வந்த ஒபவ்வா, எதிரியின் படைகள் கோட்டைக்குள் நுழைய முற்படுவதைக் கண்டார். அருகில் எவரும் இல்லாத சூழலில், தமது கையில் இருந்த உலக்கையை வைத்து முதல் வீரரைத் தலையில் அடித்துக் கொன்றார். இதேபோல தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் ஒபாவ்வாவினால் கொல்லப்பட்டனர்.
அப்போது, பணிக்குத் திரும்பிய கணவர், கையில் ரத்தம் சொட்டும் உலக்கையுடன் ஒபவ்வா நிற்பதையும், கீழே எதிரி வீரர்களின் உடல்கள் கிடப்பதையும் கண்டார். உடனடியாக மற்ற வீரர்களை எச்சரிக்கை செய்து அபாயச் சங்கை ஊதினார். இதையடுத்து, அங்கே கூடிய மதகரி நாயக்கரின் படைகள், மற்ற எதிரி வீரர்களையும் கொலை செய்தனர். இதனால், ஹைதர் அலியின் கோட்டைப் பிரவேசம் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த பெண், கர்நாடகாவின் வீரப் பெண்மணி என அழைக்கப்படுகின்றார். இவரது வீரத்தை பெருமைப்படுத்தும் விதமாக, தற்போது, இந்த மகளிர் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
Next Story