யார் இந்த சுனில் அரோரா?
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சுனில் அரோரா...?
தற்போது தலைமை தேர்தல் ஆணையராக உள்ள ஓபி ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தற்போதைய 3 தேர்தல் ஆணையர்களுள் ஒருவரான 62 வயதான சுனில் அரோரா புதிய தலைமை தேர்தல் ஆணையராக, நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 2 முதல் அவருடைய பதவிக்காலம் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலும், சுமார் 10 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களும், சுனில் அரோரா முன் உள்ள சவால்களாக இருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் அரோரா, 1976 இல் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் முடித்தார். ஐ.ஏ.எஸ். ஆவதற்கு முன் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வானார். 38 ஆண்டுகால பணிக்காலத்தில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.1999 முதல் 2002 வரை இந்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை செயலராக பணியாற்றினார். அப்போதுதான் கந்தஹார் விமானக் கடத்தல் சம்பவம் நடந்தது. தன்னுடைய பதவிக்காலத்தில் நடந்த இக்கட்டான சூழலை திறைமையுடன் கையாண்டார்.
2015 இல் தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றியபோது புனே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நிகழ்ந்த வன்முறை போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்தார். திட்டக்குழு, நிதியமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம் உள்ளிட்டவற்றில் முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார் சுனில் அரோரா. விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் பணியாற்றியபோது பல சீர்த்திருத்தங்களை கொண்டுவந்ததன் மூலம், ஏர் இந்தியாவினை லாபத்தில் இயங்க வைத்தது, இவரின் குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.
பிரச்சினைகளை ஆராய்ந்து முடிவுகளை உடனுக்குடன் எடுப்பவர் என்று பெயர் பெற்ற சுனில் அரோரா, 2019 நாடாளுமன்ற தேர்தல் களத்திலும், மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் களத்திலும் என்னென்ன அதிரடியான முடிவுகளை அறிவிக்கப் போகிறார் என்று மாநில, தேசிய கட்சிகள் பலவும் உற்றுநோக்கி வருகின்றன.
Next Story