இந்தியாவில் ஒரு மர்ம தீவு : அமெரிக்க இளைஞர் உயிரிழப்பின் பின்னணி என்ன?

சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளாக தனித்து வாழ்ந்து வரும் பழங்குடியினர் குறித்துப் பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...
இந்தியாவில் ஒரு மர்ம தீவு : அமெரிக்க இளைஞர் உயிரிழப்பின் பின்னணி என்ன?
x
பழங்குடியினருக்கு கடவுள் குறித்து போதனை செய்யப் போவதாகக் கூறிவிட்டு, அந்தமானில் இருக்கும் சென்டினல்(Sentinel) தீவுக்குள் தனியாகச் சென்றிருக்கிறார் அமெரிக்க மதபோதகர் ஜான் ஆலன். அவருடன் வந்த உள்ளூர்வாசிகளை தூரத்தில் நிறுத்திவிட்டு, சிறிய படகில் தனியாக சென்ற ஜான் ஆலன், திரும்பவில்லை. அவர் பழங்குடியினரின் அம்புக்கு இரையாகிவிட்டதாக, அந்தமான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

யார் இந்த பழங்குடியினர்? கடந்த 1966-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை இந்த பழங்குடியினரைச் சந்திக்க, மானுடவியல் ஆராய்ச்சியாளர் Triloknath Pandit முயன்று கொண்டிருந்தார். சென்டினல் பழங்குடியினரைச் சந்தித்த முதல் ஆராய்ச்சியாளர் இவர். அந்த தீவில், தென்னை மரங்கள் இல்லை என்பதை அறிந்து, பழங்குடியினருக்கு இளநீர் பரிசளித்துள்ளார். இளநீர் மீது தீராக் காதல் கொண்ட பழங்குடியினர், அவரை ஏனோ ஒன்றும் செய்யவில்லை. 

இந்த பழங்குடியினர், மிகவும் தனிமை விரும்பிகள் என்று கூறியுள்ள பண்டிட், 1966-ம் ஆண்டு முதல் 91-ம் ஆண்டு வரை 7, 8 பேருடன் சென்டினல் தீவிற்கு, அடிக்கடி சென்றுள்ளார். "அப்போது, அந்த தீவில், 18 குடிசைகள் இருந்தன. அம்புகள், வில்களை ஏராளமாகப் பார்க்க முடிந்தது. அம்புகளைக் கூர்மைப்படுத்த இரும்பை அவர்கள் உபயோகித்தனர்." என்று பண்டிட் தெரிவித்துள்ளார். 

அப்போது, இந்தியப் பழங்குடியின அமைச்சகத்துடன் இணைந்து, பழங்குடியினருடன் இணக்கத்தை ஏற்படுத்த, பண்டிட் ஒரு திட்டம் வகுத்தார். ஏராளமான பரிசுப் பொருட்களை அங்கு விட்டு வந்தார். ஆனால், அந்த பரிசுப் பொருட்களை பழங்குடியினர், தீண்டவே இல்லை. தொடர் முயற்சிகளுக்கு பிறகு, 1991ஆம் ஆண்டு அவர்களுடனான தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியை விட்டுவிடலாம் என்று முடிவு செய்தார் பண்டிட். 

தற்போது, 83 வயதான, டி.என்.பண்டிட், பழங்குடியினருடன் தொடர்பு கொள்வதற்கு இப்படியான அவசரம் உதவாது என்று கூறியுள்ளார். அந்த தீவில் தங்கமோ, வெள்ளியோ, எண்ணெய் வளமோ, எரிவாயுவோ கிடையாது. அது அந்த பழங்குடியினருக்கு மட்டுமே உரிய தீவு. எண்ணிக்கையில் குறைவாக உள்ள அவர்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. ஒரு தொற்றுநோய் ஏற்பட்டால்கூட, அந்த இனம் மொத்தமாக அழியக் கூடிய சூழ்நிலை உள்ள போது, அங்கே பிற நபர்கள், செல்வதற்கு அனுமதி வழங்கியிருக்ககூடாது என்று, பண்டிட் தெரிவித்துள்ளார். 

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்போது, இந்தத் தீவில் இருந்த 1 லட்சம் பேருக்கும் மேற்பட்டோர், கொன்று வீழ்த்தப்பட்டனர். அப்போது, தப்பிப் பிழைத்தவர்கள் மட்டுமே, தற்போது உள்ளனர். சென்டினல் பழங்குடியினர்,  நவநாகரிக மக்களைக் கண்டால் அச்சப்படுகின்றனர். சுனாமி சமயத்தின் போது, இவர்களின் நிலையை அறிந்துகொள்ள அங்கு சென்ற ஹெலிகாப்டரின் மீது, சென்டினல் பழங்குடியினர், அம்புகளை எய்துள்ளனர். 

அந்தமான் - நிக்கோபார் நிர்வாகம், 2005 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சென்டினல் பழங்குடியினரின் வாழ்க்கையுடனோ அல்லது அவர்களின் வாழ்விடங்கள் மீதோ தலையிடும் எவ்வித எண்ணமோ, ஆர்வமோ இல்லை எனக் கூறியுள்ளது. பழங்குடியினர், நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். அவர்களை பாதுகாக்க, என்ன செய்ய வேண்டும்?''அவர்கள் விரும்பும், அந்தத் தனிமையைக் கொடுத்தாலே போதுமானது'' என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 'North Sentinel Island' என்றழைக்கப்படும் இந்த பழங்குடியினர் வாழும் பகுதி, இந்தியாவின் ஒரு மர்ம தேசம் தான்.




Next Story

மேலும் செய்திகள்