#MeToo பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு - சட்டம் சொல்வது என்ன?

பணியிடத்தில் பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் எப்படி புகார் அளிப்பது? பல வருடங்களுக்கு பின் சொன்னால் செல்லுமா?
#MeToo பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு - சட்டம் சொல்வது என்ன?
x
தேசம் முழுவதும் மீ டூ புகார்கள் தொடர்ந்து புயலை கிளப்பி வரும் சூழலில், பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த பேச்சு அதிகரித்துள்ளது. ஒரு பெண்ணுக்கு தன் பணியிடத்தில் பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் எப்படி புகார் அளிப்பது? பல வருடங்களுக்கு பின் சொன்னால் செல்லுமா? பணியிடத்திற்கு வெளியில் நடந்தால் என்ன செய்வது? பொய் புகார் கொடுப்பவர்களை தண்டிக்க முடியுமா? இப்படி பல கேள்விகள் வீசப்படுகின்றன.
இதற்கெல்லாம் பதிலளிக்கத்தான் நமது நாடாளுமன்றம் 2013-லேயே பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தை நிறைவேற்றியது. 



இந்த சட்டம் என்ன சொல்கிறது?

விசாகா பரிந்துரைகளை ஒட்டி அமைந்துள்ள இந்த சட்டத்தின் படி, 10 பேருக்கு மேல் வேலை செய்யக்கூடிய எந்த அலுவலகத்திலும், பாலியல் தொந்தரவுகள் பற்றி புகார் அளிக்க ஒரு தனி குழு அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்காத நிறுவனங்கள் மீது முதலில் அபராதம் விதிக்கவும், தொடர்ந்து மீறினால் அங்கீகாரத்தையே ரத்து செய்யவும் சட்டம் இடமளிக்கிறது.

இந்த குழுவில் யார் யார் இருப்பார்கள்? 

அந்த அலுவலகத்தில் பணி புரியும் ஒரு மூத்த பெண் உறுப்பினர் குழுவின் தலைவராக இருப்பார். அவர் தவிர, குறைந்தபட்சம் 2 ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இவர்களுடன் அந்த அலுவலகம் சாராத வெளிநபர் ஒருவர் இருப்பார். இவர் பெண்களின் பிரச்சனைகளை அறிந்த ஆர்வலராகவோ, தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியாரகோ இருக்க வேண்டும். குழுவின் மொத்த உறுப்பினர்களில், 50% பெண்கள் இருக்க வேண்டும். 

எதற்கெல்லாம் புகார் தர முடியும்? 

*  அனுமதியில்லாமல் தகாத முறையில் தொடுவது அல்லது தொட முயற்சித்தல்

*  நேரடியாகவோ மறைமுகமாகவோ தனது பாலியல் விருப்பங்களை நிறைவேற்ற கோருதல்

*  பாலியல் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் பேசுதல்

* ஆபாச படங்கள் காட்டுதல், பார்க்க வர்புறுத்துதல்

* வார்த்தைகளாலோ, உடல் மொழியாலோ பாலியல் தொந்தரவு செய்தல்

*  பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்தால் பணியில் உயர்வு தருவதாக வாக்குறுதி அளித்தல்

*  பாலியல் தேவைகளை நிறைவேற்றாவிட்டால் பணியிடத்தில் பாதிப்பு ஏற்படுத்துவேன் என்று மிரட்டுதல்

*  பாலியல் தேவைகளுக்கு இசையாதவர்களை பணியிடத்தில் அவமானப்படுத்துதல்



யார் மீது புகார் கொடுக்கலாம்?

அலுவலக முதலாளி முதல் கீழ்நிலை ஊழியர் வரை தன்னுடன் வேலை செய்யும் எந்த நபர் தவறாக நடந்தாலும் புகார் அளிக்கலாம். வாகன ஓட்டுனர், வாடிக்கையாளர், தொடர்புடைய நிறுவங்களில் பணிபுரிபவர் என அந்த அலுவலகத்தின் ஊழியரே இல்லை என்றாலும் அலுவலக வேலையாக இருக்கும்போது தொந்தரவு தந்தால் இந்த குழுவிடம் புகார் அளிக்கலாம். 

இவ்வளவு ஏன், இது போன்ற தொந்தரவுகள் அலுவலக வளாகத்திற்குள் தான் நடக்க வேண்டும் என்பதும் இல்லை. அலுவலக பணிக்காக வேறு இடத்திற்கு சென்றாலும்; வெளியூறுக்கோ வெளிநாட்டிற்கோ சென்றாலும் கூட, அங்கும் இந்த சட்டம் பொருந்தும். அலுவலக வாகனத்தில் செல்லும் போது தொந்தரவு கொடுத்தாலும் புகார் அளிக்கலாம். 

புகார் வந்த பின் என்ன நடக்கும்?

உடனே விசாரணை தொடங்காது. முதலில் இரு தரப்பினருக்கிடையே பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தையில் சமரச உடன்பாடு ஏற்பட்டால், வழக்கு முடித்து வைக்கப்படும். ஆனால், பணம் கொடுத்து பிரச்சனையை முடித்துவைக்க கூடாது. 

சமரசம் ஏற்படவில்லை என்றால்?

உடன்பாடு இல்லாத பட்சத்தில், 90 நாட்களுக்குள் விசாரணை நடத்தி குழு முடிவெடுக்கும். இந்த விசாரணையின் போது ஆண், பெண் இருவரது பெயர்களும் அடையாளமும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும். கோரிக்கை வைக்கப்பட்டால், இருவரில் ஒருவருக்கு பணி மாறுதலும் கொடுக்கலாம். பாதிக்கப்பட்ட பெண் விரும்பினால், அதிகபட்சம் 3 மாதம் வரை அவருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் இந்த சட்டத்தில் இடமுண்டு. 

விசாரணையில் இருவருக்கும் தங்கள் தரப்பை சொல்ல சம வாய்ப்பு வழங்க வேண்டும். சாட்சிகளை அழைக்கவும், ஆவணங்கள் கோரவும், சிசிடிவி போன்ற ஆதாரங்களை திரட்டவும் குழுவிற்கு அதிகாரம் உண்டு. 



குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை?

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அந்த அலுவலக விதிகளின் படி, பணி நீக்கம் வரையான எந்த தண்டனையும் வழங்கலாம். அபாரதத்தொகையை குற்றவாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடாகவும் வழங்கலாம். தீவிரமான குற்றம் நடைபெற்றிருந்தால், புகாரை 7 நாட்களுக்குள் காவல்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

பொய் புகார் என்றால்?

புகாருக்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதாலேயே பொய் புகார் என்று கருதப்படாது. அதே சமயம், புகார் உள்நோக்கத்துடனும் கொடுக்கப்படிருப்பது தெரியவந்தாலோ, சாட்சியங்கள் சித்தரிக்கப்பட்டவை என்பது நிரூபணமானாலோ புகார் அளித்த பெண் மீதும் அவருக்கு உடந்தையானவர்கள் மீதும் பணி நீக்கம் வரையிலான அலுவலகபூர்வ நடவடிக்கை எடுக்கலாம். 


Next Story

மேலும் செய்திகள்