சீரடி சாய் பாபாவின் ஆன்மிக வாழ்க்கை பயணம்...

சீரடி சாய்பாபா சமாதி நிலையை அடைந்த நூறாண்டு நினைவு தினத்தில், அவரது ஆன்மீக வாழ்க்கை பயணம் பற்றிய தகவல்கள்
சீரடி சாய் பாபாவின் ஆன்மிக வாழ்க்கை பயணம்...
x
சீரடி சாய் பாபா 1835ம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி பிறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. காரணம், பாபாவின் உண்மையான பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி குறித்த ஆதாரங்கள் இல்லை. அவர் சிறு வயதில் மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள சீரடிக்கு வந்து ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்துள்ளார். கடும் தவத்தில் மூழ்கி இருந்தவரை, அப்பகுதி மக்கள் விரட்டினர். ஆனால், 'இவர் சாதாரண நபர் இல்லை' என்று கூறிய ஒரு சாமியார், இவரை 'சாய்' என்றழைத்தார். இதற்கு, பாரசீக மொழியில் 'ஏழை' என்றும், பஞ்ஜாரா மொழியில் 'சிறந்தவர்' என்றும், சமஸ்கிருதத்தில், 'சிவனின் அவதாரம்' என்றும் பொருள் கூறப்படுகிறது.
  
3 ஆண்டுகள் சீரடியிலேயே இருந்த சாய் பாபா, 1857 ம் ஆண்டு மாயமானார். ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் திரும்பியவர், ஜான்சி ராணிக்கு உதவி செய்ய சென்றதாக கூறியுள்ளார். சீரடியில் உள்ள ஒரு  பாழடைந்த மசூதியில் தனியாக தங்கியிருந்த சாய்பாபா,  அங்கே ஒரு தீக்குண்டத்தை உருவாக்கினார். அணையாமல் எரிந்த தீக்குண்டத்தில் இருந்து கிடைக்கும் சாம்பலை எடுத்து, விபூதியாக கொடுப்பார். தீமையை அகற்றும் சக்தி சாம்பலுக்கு இருப்பதாக, அவரது பக்தர்கள் நம்பினார்கள்.  

இந்துக்கள் மட்டுமின்றி, முஸ்லீம்களும் இவரை நாடி வந்தனர். துறவி, சத்குரு என பக்தர்களால் இவர் அழைக்கப்பட்டார். இவரது போதனைகள், இந்து, இஸ்லாமிய மதத்தை பின்பற்றி இருந்தது. கடவுள் ஒருவரே எனும் பொருள் கொண்ட "Sabka Malik Ek" என, அடிக்கடி கூறுவார். தம்மிடம் வரும் முஸ்லீம்களை குரான் படிக்கவும், இந்துக்களை ராமாயணம், மகாபாரதம் படிக்கவும் வலியுறுத்துவார். 
 
சாய்பாபா  இந்துவா ? முஸ்லீமா? என்பது விடையில்லா கேள்வியாகவே நீடிக்கிறது. கடவுள் மறுப்புக்கொள்கையை இவர் கடுமையாக விமர்சித்துள்ளார். Bhakti Yoga, Jnana Yoga, மற்றும் Karma Yoga ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தார். அன்பு,மன்னிப்பு, உதவி, திருப்தி, குரு பக்தி மற்றும் கடவுள் பக்தி உள்ளிட்டவற்றை பக்தர்களிடையே வலியுறுத்தியுள்ளார்.

ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருப்பது, அந்தரத்தில் மிதப்பது, பிறர் மனதில் இருப்பதை கூறுவது, தண்ணீரில் தீ மூட்டுவது, வியாதிகளை தீர்ப்பது, கொதிக்கும் உலையில் கைவிடுவது என்று, ஆச்சரியப்படுத்தியுள்ளார். பக்தர்களை மகிழ்விக்க, இசைக்கு ஏற்றவாறு ஆனந்த நடனம் ஆடுவார். 1910ம் ஆண்டில், சாய்பாபாவின் புகழ் வெளி மாநிலங்களில்  பரவியது.

1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி  சாய்பாபா மறைந்தார். அவர் சமாதியடைந்து நூறாண்டுகளாகிறது. தற்போதும், கனவில் தோன்றி, தேவையான ஆலோசனைகளை பாபா வழங்குவதாக அவரது பக்தர்கள் நம்புகின்றனர். சாய்பாபா சமாதியடைந்த இடத்தில், அவருக்கு 1922ல் ஆலயம் எழுப்பப்பட்டது. இங்கு, சராசரியாக தினமும் 60 ஆயிரம் பேர் வருகின்றனர். முக்கிய நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிகின்றனர். 

பக்தர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, அதிக இடவசதி கொண்ட உணவுக் கூடம் இங்கு, செயல்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய உணவுக்கூடமான இங்கு, ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பேர் சாப்பிடலாம். இங்கு மிகக் குறைந்த கட்டணத்தில், உணவு வழங்கப்படுகிறது. உலகம் முழுக்க சாய் பாபாவின் பக்தர்கள் உள்ளனர். நேபாளம், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா,  ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட  பல்வேறு நாடுகளில் சாய்பாபா சேவை மன்றம் உள்ளது. 
 
இந்த வருட நூற்றாண்டு தினத்தில், பக்தர்கள் பாபாவின் தரிசனத்திற்காக சீரடியில் குவிந்து வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்