2019 ஜனவரி 14 - மார்ச் 4ம் தேதிகளில் கும்பமேளா : அதிக நிதி ஒதுக்கீடு

அலகாபாத்தில் அடுத்தாண்டு கும்பமேளா நடைபெறும் தேதியை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
2019 ஜனவரி 14 - மார்ச் 4ம் தேதிகளில் கும்பமேளா : அதிக நிதி ஒதுக்கீடு
x
12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவதை, பூரண கும்பமேளா என்றழைக்கின்றனர். 12 கும்பமேளாவுக்குப் பிறகு, 144 ஆண்டுக்கு ஒரு முறை வருவது, மகா கும்பமேளா. 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை, அரை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். கடந்த 2013ம் ஆண்டு, பூரண கும்பமேளா நடைபெற்ற நிலையில், அரை கும்பமேளா விழா, 2019ம் ஆண்டு நடைபெறுகிறது. 

ஜனவரி 14-ம் தேதி மகர சங்கராந்தி தொடங்கி, மார்ச் மாதம் 4-ம் தேதி மகா சிவராத்திரி வரை 50 நாள்கள் கும்பமேளா நடைபெறும் என அலகாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

பாற்கடலிலிருந்து பெறப்பட்ட அமுத கலசத்தை திருமால் சுமந்து சென்ற போது, அதில் இருந்து 4 துளிகள் நான்கு இடங்களில் விழுந்தன. அவை, அலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்வார் ஆகிய இடங்கள் என்றும்  இந்த இடங்களில் அமுதம் விழுந்த நாளில், கும்பமேளா விழா நடத்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. 

அமுதம் சிந்திய இடங்களில் உள்ள நீர் நிலைகளில், அன்றைய நாளில் அமுதம் பொங்குவதாக ஐதிகம். அன்று நீராடுவது எல்லாவித பாவங்களையும் நீக்கி சந்தோஷத்தைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. 

இதனால் தான், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் மூன்றும் கூடும், திரிவேணி சங்கமத்தில், லட்சக்கணக்கானோர் புனித நீராடுகின்றனர். 

இதற்காக 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியை மத்திய - மாநில அரசுகள் ஒதுக்கி, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இதில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில், 15 ஏக்கரில், ''சமஸ்கிருத கிராமம்'' உருவாக்கப்படுகிறது. இதில், அருங்காட்சியகம் அமையவுள்ளது. 

இதற்காக, பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ''பாகுபலி'' அரங்கத்தை போல், இங்கும் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த பணியில், 'பாகுபலி' கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்த திருவிழாவை, மேலும் பிரபலமாக்க, பிரமாண்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதன்படி 2019ம் ஆண்டு கும்பமேளா, சர்வதேச நிகழ்வாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது, அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச அரசின் நிதி மற்றும் விளம்பரதாரர்களிடம் இருந்து வரும் நிதிகளைக் கொண்டு, 'பாகுபலி'யின், பிரமாண்டத்தை நேரில் கொண்டு வரவுள்ளனர். 

இந்த அருங்காட்சியகத்தில், வேத காலத்தில் இருந்து, இன்றைய இந்திய கலாச்சாரம் வரையிலான ஆன்மீக நிகழ்வுகளை, 3 மணி நேரம் பார்வையாளர்களுக்கு வழங்கவுள்ளனர். கும்ப மேளாவிற்காக அமைக்கப்படும் இந்த அருங்காட்சியகம், பார்வையாளர்களின் வரவேற்பை பொறுத்து, நிரந்தரமாக்கவும், திட்டமிட்டுள்ளனர். 

இந்த கும்பமேளாவிற்கு சுமார் 15 கோடி பக்தர்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஆன்மீக பயணிகளைக் கவரவும், இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் பணியாற்றி வருகிறது. 192 நாடுகளைக் கவரும் விதமாக, விளம்பரத்திற்காக மட்டுமே, சுமார் 450 கோடி ரூபாய் செலவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்