நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா..?

விஜய் மல்லையா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா என்பது தொடர்பான வழக்கில், வரும் டிசம்பர் 10ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, லண்டன் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா..?
x
9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் முறைகேடு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில், சிபிஐ தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெற்றது. 

அப்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் விஜய் மல்லையாவை அடைப்பதற்கான அறையில் உள்ள வசதிகள் பற்றிய வீடியோ தாக்கல்  செய்யப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கில் இறுதி விசாரணை நடத்திய நீதிமன்றம், வரும் டிசம்பர் 10ம்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

இந்த தீர்ப்பின் மூலம் விஜய்மல்லையா இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவாரா என்பது தெரிய வரும். முன்னதாக,  இந்தியாவில் இருந்து தாம் வெளியேறும் முன்பு,  மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்ததாக, விஜய்மல்லையா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் மல்லையா கூறுவது பொய் - அருண் ஜெட்லி



இந்நிலையில், விஜய் மல்லையாவின் குற்றச்சாட்டு தொடர்பாக, விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, அவரது பேட்டி உண்மை இல்லை எனக் கூறியுள்ளார். 

2014ம் ஆண்டு முதல் தற்போது வரை மல்லையாவை சந்திக்க நான் எந்த அனுமதியும் வழங்கவில்லை எனக் கூறியுள்ள அவர், மாநிலங்களவை உறுப்பினராக அவர் இருந்ததால், நாடாளுமன்றத்தில்  அவரை சந்தித்ததுண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரச்னைக்கு தீர்வு காண தனக்கு உதவுமாறு நாடாளுமன்ற வளாகத்தில் தன்னிடம் ஒருமுறை அவர் உதவி கோரியபோது, தன்னை அணுகுவதை விட வங்கியை அணுகுமாறு அவருக்கு அறிவுறுத்தினேன் எனவும் நிதியமைச்சர்
அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.

அருண் ஜெட்லியை சந்தித்தது உண்மை" -  விஜய் மல்லையா விளக்கம்



இந்நிலையில், அருண் ஜெட்லியை தாம் சந்தித்தது உண்மைதான் எனவும், லண்டன்  செல்ல இருப்பதை அவரிடம் முன்பே தெரிவித்தேன் எனவும் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். 

லண்டன் நீதிமன்றம் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடனை  திருப்பிச் செலுத்துவது தொடர்பாக தாம் தெரிவித்ததை அருண்ஜெட்லி ஏற்றுக்கொண்டார் என்றார். அவரை சந்தித்து உண்மைதான் என்றும், ஆனால் வங்கிகள்தான் தனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் விஜய் மல்லையா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்