கேரளாவை உலுக்கி வரும் கனமழை - ஓர் ஆய்வு

கேரளாவை உலுக்கி வரும் கனமழையின் தீவிரத்தை அலசுகிறது இந்த தொகுப்பு...
கேரளாவை உலுக்கி வரும் கனமழை - ஓர் ஆய்வு
x
மலைகளுக்கும், கடற்கரைகளுக்கும் பெயர் பெற்ற கேரள மாநிலம், தற்போது நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மலைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் உண்டான நிலச்சரிவு, பலரையும் பலி வாங்கியுள்ளது. 

இந்தாண்டு அதிக அளவில் பெய்த மழையால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உண்டான வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காரணங்களால் 700க்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர். கேரளாவில், பெய்து வரும் கனமழையால் 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர், வீடுகளையும் உடமைகளையும் இழந்து தத்தளித்து வருகிறார்கள்.

எங்கு பார்த்தாலும் பசுமையான காடுகள் ஆக்கிரமித்திருக்கும் கேரளாவில் தற்போது வெள்ளக்காடு சூழ்ந்திருக்கிறது. கேரளா முழுவதும் 250க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில அரசுக்கு உதவியாக ராணுவத்தினரும் மீட்பு மற்றும் உதவிப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ''24க்கும் மேற்பட்ட அணைகள் நிரம்பி வழிவதால் அவை திறந்துவிடப்பட்டுள்ளன'' என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கன மழையால், அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளது. நீர் நிலைகளின் கரை ஓரங்களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாநில அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை பாதிப்பால், நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றன.

'ஏரிகளின் நகரம்' என்று அழைக்கப்படும் எர்ணாகுளம் மற்றும் இடுக்கி, வயநாடு உள்ளிட்ட மலைப்பாங்கான மாவட்டங்களில் உண்டாக்கப்பட்டுள்ள கட்டட ஆக்கிரமிப்புகள் வெள்ள சேதத்தை அதிகமாக்கியுள்ளன. தற்போது மெல்ல மெல்ல மழையின் அளவு குறைந்து வருவது பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் கேரளாவுக்கு சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு சென்னையில் உள்ள துணைத் தூதரகம் மூலம் அமெரிக்கா தம் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது பலரது ஆதரவுக் கரம் கேரளாவிற்கு தேவைப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்