கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு - ஆறு, குளங்களில் தண்ணீர் நிரம்பியது

கர்நாடகாவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு - ஆறு, குளங்களில் தண்ணீர் நிரம்பியது
x
குடகு, சிக்மகளூரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தின் பாகமண்டலா, மடிக்கேரி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பெரும்பாலான இடங்களில் ஆறு, குளங்கள் நிரம்பியுள்ளது. பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால்,  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

"காவிரி கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின"

காவிரி ஆற்றில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரங்களில் உள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மக்களை தீயணைப்பு படையினர் படகு மூலம் மீட்டனர். தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல சிருங்கேரி, சிக்மகளூரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இந்நிலையில், குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம்  கனஅடியாக உள்ளது. அணை வேகமாக நிரம்பி வருவதால், அணையில் இருந்து 18 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  

"கனமழைக்கு பிறகு இயல்பு நிலை திரும்புகிறது"

மழை பாதிப்பு குறைந்ததை அடுத்து தற்போது மும்பை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. வர்த்தக தலைநகரான மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. 4 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், தாதர், அந்தேரி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே மரங்கள் விழுந்ததால்,  மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மழை குறைந்ததை அடுத்து, தண்ணீர் சூழ்ந்த இடங்களில் வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இயல்பு நிலை திரும்பி வருவதால், பல்வேறு இடங்களில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்