அழிவின் விளிம்பில் தூக்கணாங்குருவிகள்...

அழிவின் விளிம்பில் இருக்கும் தூக்கணாங்குருவிகளை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
அழிவின் விளிம்பில் தூக்கணாங்குருவிகள்...
x
அழிவின் விளிம்பில் தூக்கணாங்குருவிகள்...



தூக்கணாங்குருவிகள் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது அதன் கூடுகள் தான்... தனது சின்னஞ்சிறு அலகால் அவை கூடு கட்டும் நேர்த்தி, பல இஞ்சினீயர்களுக்கு முன்னுதாரணம்... யோசித்துப்பாருங்கள், கைகள் இல்லாமல் செங்கலையும் சிமெண்டையும் வாயால் கவ்வி நம்மால் வீடு கட்ட முடியுமா...? அப்படிதான் தனது சின்னஞ்சிறு அலகினால், ஆங்காங்கே கிடைக்கும், தேங்காய் நார், வைக்கோல் என குப்பைகளை சேமித்து கூடு கட்டுகிறது தூக்கணாங்குருவி...

அதே போல, தூக்கணாங்குருவி கூடுகளை உற்றுநோக்கினால், பிரம்மித்து போகும் பல அம்சங்களை காண முடியும்... ஒவ்வொன்றாக பார்ப்போம்...நம் வீடுகளில், வரவேற்பு அறை, படுக்கை அறை, சமையல் அறை உள்ளது போல, தூக்கணாங்குருவிகளும் தனித்தனி அறைகள் அமைத்து முட்டைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்கின்றன. சில ஆடம்பர வசதிகளும் இங்கு உண்டு... ஆம்... இனப்பெருக்க காலத்தில், கூடுகளில்  களி மண் கொண்டு மின்மினி பூச்சிகளை ஒட்டி, வெளிச்சத்தை பெற்று கொள்கின்றன இந்த தூக்கணாங்குருவிகள்...



தூக்கணாங்குருவிகள், ஆண் பனை மரத்தில், அல்லது ஆண் தென்னை மரத்தில் தான் தனது கூட்டினை அமைக்கும்... அது ஏன் தெரியுமா... பெண் மரங்களில், இளநீருக்காகவோ அல்லது நுங்கு பறிக்கவோ, மனிதர்கள் ஏறும் போது, குருவிகளின் கூடுகளுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காகவே...இது மட்டுமல்ல, பருவ நிலை மாற்றங்களையும் முன்கூட்டியே கணிக்கும் அசாத்திய திறன்  கொண்டவை தூக்கணாங்குருவிகள்... தென்மேற்கு பருவ காலத்தின்போது, தனது கூட்டின் வாசலை வடகிழக்கு திசை நோக்கியும், வடகிழக்கு பருவ காலத்தில், தனது கூட்டை தென்மேற்கு திசையிலும் அமைத்து கொள்கின்றன. நம் முன்னோர்கள் கூட தூக்கணாங்குருவி கூடுகளை வைத்து தான் பருவ நிலை மாற்றத்தை கண்டறிந்தார்கள் என்றால் மிகையாகாது.

இத்தனை அசாத்திய திறமைகளை பெற்ற தூக்கணாங்குருவிகள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ள பறவையினமாக மாறியுள்ளது அவலத்தின் உச்சம்... காடுகள், மரங்கள் அழிக்கப்பட்டு வருவதால், தூக்கணாங்குருவிகள் மின் கம்பங்களிலும், செல்போன் கோபுரங்களிலும் கூடுகளை கட்டி வருகின்றன. இதில், கதிர்வீச்சுகளின் தாக்கத்தால், கருத்தரிப்பு நடைபெறுவதில்லை. 

இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில், தூக்கணாங்குருவிகளை வெறும் புத்தகங்களிலும், புகைப்படமாகவும் மட்டுமே காண முடியும் என ஆதங்கம் தெரிவிக்கும் பறவைகள் நல ஆர்வலர்கள். இவற்றை பாதுகாக்க காடுகள், மரங்களை பாதுகாப்பதே ஒரே வழி என்கின்றனர்...



Next Story

மேலும் செய்திகள்