தகுதி இல்லாதவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது நல்லது - சென்னை உயர் நீதிமன்றம்

செவிலியர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை பெற்ற தீபிகா கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம்
தகுதி இல்லாதவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது நல்லது - சென்னை உயர் நீதிமன்றம்
x
கடன் கொடுத்துவிட்டு அதனை செலுத்தாதவர்களின் பின்னால் ஓடுவதற்கு பதிலாக தகுதி இல்லாதவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது நல்லது என சென்னை உயர் நீதிமன்றம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் அந்தணன் பேட்டையில் உள்ள செவிலியர் கல்லூரியில் மாணவர்  சேர்க்கை பெற்ற தீபிகா என்ற மாணவி, கல்விக்கடன் கேட்டு பாரத ஸ்டேட் வங்கியின் தலைஞாயிறு கிளையில் விண்ணப்பித்து இருந்தார். 

இந்த விண்ணப்பத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கி நிராகரித்தது. வங்கியின் இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கல்வி கடன் வழங்க உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபிகா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செவிலியர் படிப்பு கல்விக்கடன் திட்ட வரம்புக்குள் வராது என வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

மனுதாரரின் தந்தை பலமுறை கடன்கள் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் இருப்பதால் தீபிகாவின் மனு நிராகரிக்கப்பட்டதாகவும் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக பல நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதாகவும், ஆனால் அவர்கள்  வெளிநாடுகளுக்கு தப்பி விடுவதாகவும் தெரிவித்தார். 

கடனை பெற்று விட்டு திருப்பி செலுத்தாதவர்கள் பின்னால் ஓடுவதை விட்டுவிட்டு,  திருப்பி செலுத்த தகுதி இல்லாதவர்களின் கடன் விண்ணப்பங்களை ஆரம்பத்திலேயே நிராகரிப்பதே நல்லது என, வங்கிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

இந்த வழக்கில், மனுதாரரின் தந்தை, பல கடன்கள் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருப்பதால், கல்வி கடனை மறுத்தது சரியே என கூறி தீபிகாவின்  மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்