விசாரணை வளையத்தில் கன்னட திரையுலகம் - நடிகை ராகினி திவேதி 2வது குற்றவாளியாக சேர்ப்பு

கர்நாடக மாநிலத்தில் கிளம்பிய போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை ராகினி திவேதி, 2 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
விசாரணை வளையத்தில் கன்னட திரையுலகம் - நடிகை ராகினி திவேதி 2வது குற்றவாளியாக சேர்ப்பு
x
விதவிதமான மிட்டாய்கள் போல போதைப் பொருட்களை உருமாற்றி அதை விஐபிகளை குறிவைத்து விற்பனை செய்த போதைப் பொருள் கும்பலை சேர்ந்த 3 பேர் பெங்களூருவில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெங்களூருவில் ஆர்டிஓ அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ரவிசங்கர் முக்கிய குற்றவாளியாக இருந்தது தெரியவந்தது. இவருடைய செல்போனில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் , இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் நடிகை ராகினி. ஆர்டிஓ அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நடிகை ராகினியுடன் ஓரே வீட்டில் ரவிசங்கர் இருந்ததும் உறுதியாகி உள்ளது. மாத சம்பளமாக 35 ஆயிரம் ரூபாய் வாங்கிய ரவிசங்கர், ராகினிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்தது எப்படி? என்றும் கேள்வி எழுந்துள்ளது. 

இந்த விவகாரத்தில் அடுத்த சர்ச்சையில் சிக்கியிருப்பவர் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா. இவரும் இருவடைய ஆண் நண்பரான ராகுல் மற்றும் வீரேன் கான் என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அதேநேரம் கன்னட திரையுலகத்திற்கு போதைப்பொருள் விநியோகம் செய்த ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த லோம் பெப்பர் சாம்பா என்பவரும் கைதாகி உள்ளார். போதைப் பொருள் கடத்தல் மன்னனான இவர், கன்னட திரையுலக விஐபிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. நடிகை ராகினி திவேதியுடன், கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா இருக்கும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது விஜயேந்திராவுக்காக வாக்கு சேகரித்துள்ளார் ராகினி திவேதி. 

இந்த கடத்தல் கும்பலுடன் கேரள தங்க கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்க ராணி ஸ்வப்னா உள்ளிட்டோருடன் கைதான ரெமீஸ் என்பவருக்கும் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய முகமது அனூப் என்பவருக்கும் நீண்ட காலமாக தொடர்பு இருந்துள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட முகமது அனூப், கர்நாடகாவில் ஓட்டல் ஒன்றை திறந்த போது அதற்காக கேரள திரை உலகத்தினர் பலரும் வாழ்த்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இதை ஆதாரமாக வைத்து இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைதான முகமது அனூப்புக்கும் கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினிஷ்ஷூக்கும் தொடர்பு இருப்பது உறுதியான நிலையில் இது அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையின் போது மும்பையில் ரியா சக்கரபோர்த்தி பற்ற வைத்த நெருப்பு கர்நாடகாவை தொடர்ந்து இப்போது கேரளாவிலும் உக்கிரத்தை காட்ட தொடங்கியிருக்கிறது...

Next Story

மேலும் செய்திகள்