பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா மோதல் விவகாரம்: இளையராஜாவிற்கு கைகொடுத்த இயக்குநர்கள்

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும், பிரசாத் ஸ்டுடியோவிற்கும் இடையேயான பிரச்சினைக்கு இருதரப்புக்கும் பாதகம் இல்லாமல் தீர்வு காணப்படும் என இயக்குநர் பாரதிராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா மோதல் விவகாரம்: இளையராஜாவிற்கு கைகொடுத்த இயக்குநர்கள்
x
தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் இன்றையளவிலும்  அதிகமாக ஒலித்து கொண்டிருப்பது இசைஞானி இளையராஜாவின் இசை தான். இப்படி, ரசிகர்களை, சுண்டி இழுத்து, அவர்களின் உணர்வில் கலந்த பாடல்களை கொடுத்த இளையராஜா, தனது இசையை கோர்ப்பது சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தான். திரைத்துறை வரலாற்றில், தனது இசை வாழ்க்கையின், 45 ஆண்டுகளை பிரசாத் ஸ்டுடியோவில் கழித்தவர் இசைஞானி இளையராஜா. இளையராஜா தங்கள் ஸ்டுடியோவில் இருப்பதை  பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் பெருமையாகவே கருதியது. தனது ராசியான பிரசாத் ஸ்டுடியோவை, இளையராஜா, கோவிலாக பாவித்து வந்தார். இந்த நிலையில் இளையராஜாவிற்கும் - பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கு மனவருத்தம் ஏற்பட்டு, புகார் அளிக்கும் அளவிற்கு சென்றது, திரையுலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இதை தொடர்ந்து, அவரது நீண்ட கால நண்பரும், இயக்குநருமான பாரதிராஜா, இளையராஜாவிற்கு ஆதரவு தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன், தேனியில் இருந்த இளையராஜாவை நேரில் சந்தித்த பாரதிராஜா, பிரச்னைகளை கேட்டறிந்தார். இதை தொடர்ந்து சீமான் உள்ளிட்ட இயக்குநர்களும் இளையராஜாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, வியாழக்கிழமையன்று, பிரசாத் ஸ்டுடியோவிற்கு பாரதிராஜா தலைமையில், இயக்குநர்கள், பாக்யராஜ், சீமான், ஆர்.கே.செல்வமணி, இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் சென்றனர். சிறிது நேரம் அவர்களை பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் உள்ளே விடமறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியாக, பாரதிராஜா உள்ளிட்டோர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, இந்த விவகாரம் தொடர்பாக 2 அல்லது 3 நாட்களுக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார். அப்போது இருதரப்புக்கும் பாதகம் இல்லாமல் நல்ல முடிவு எட்டப்படும் எனவும் அவர் கூறினார். 

திரைத்துறையினரின் இந்த முயற்சியின் மூலம், இளையாராஜாவிற்கும், பிரசாத் ஸ்டுடியோவிற்கும் இடையிலான 40 ஆண்டுகளை கடந்த பந்தம் தொடர்ந்து, அங்கிருந்து மீண்டும் இசை மழை பொழிய வேண்டும் என்பதே இசை ரசிகர்கள் அனைவரின் விருப்பம்.

Next Story

மேலும் செய்திகள்