Udhayanidhi Stalin vs CM Vijay | வாபஸ் பெற்றார் உதயநிதி - பாராட்டிய சபாநாயகர்

வாபஸ் பெற்றார் உதயநிதி - பாராட்டிய சபாநாயகர்

110 விதி விவகாரம் குறித்து பேசியதை திரும்பப் பெற்ற உதயநிதி சட்டப்பேரவை விதி 110 விதியின் கீழ் போராட்ட வழக்குகளை திமுக ஆட்சியில் ரத்து செய்யவில்லை என பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அதற்கான ஆதாரத்தை அளித்ததும் தான் பேசியதை திரும்ப பெற்றுள்ளார்... தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, கடந்த 2021–26 ஆம் ஆண்டுகளில் அமைதியாக போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 110 விதியின் கீழ் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை மட்டுமே வெளியிடலாம் என்றும், வழக்குகளை ரத்து செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிடக் கூடாது என்றும் வாதிட்டனர். இதற்கு பதிலளித்த சபாநாயகர், முதலமைச்சர் 110 விதியின் கீழ் இதனை அறிவிக்கலாம் என்றும், இதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சியிலும் போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டதாகவும், ஆனால் அவை 110 விதியின் கீழ் வாபஸ் பெறப்படவில்லை என்றும் தெரிவித்தார். இதற்கு உரிய ஆதாரங்களை சபாநாயகர் வழங்கியதை அடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தான் பேசியதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து பேசிய சபாநாயகர், ஆதாரத்தைக் காட்டியவுடன் 110 விதி தொடர்பாக பேசியதைத் திரும்பப் பெற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினின் பெருந்தன்மையைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com