🔴LIVE : முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் பேனா நினைவு சின்னம்...பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் | நேரலை காட்சிகள்

x

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய வங்கக்கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பொதுப்பணித்துறை சார்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் ரூ.81 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா சிலை வைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.

இந்த சிலை அமைந்துள்ள பகுதிக்கு செல்ல கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிலான மேம்பாலமும் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படும். ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த பேனா சிலைக்கு ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ என பெயரிடப்பட்டுள்ளது

கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரிக்க தமிழக அரசுக்கு சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதி வழங்கியிருந்தது.

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த மத்திய சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அறிவுறுத்திய நிலையில், சின்னம் அமைப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல், உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்

திட்டத்தின் பொறுப்பாளர் பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டத்தில் சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் வேளாண்மை திட்டத்தின் செயல் விளக்கம் குறித்த விளக்க படத்துடன் விரிவாக விளக்குவார். கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்களை பெற வாய்ப்பு அளிக்கப்படும்

இந்த திட்டம் அமைய உள்ள இடம் இந்த திட்டத்தினால் இடம் பெயர்ச்சியாக வேண்டிய இடங்கள் மற்றும் இந்த திட்டத்தால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்ற இடங்களில் வாழும் உண்மையான குடிமக்கள் அனைவரும் மேற்கண்ட பொதுமக்கள் கருத்து கேட்டு கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களை வாய்மொழியாகவோ எழுத்துப்பூர்வமாகவோ வழங்க உள்ளார்கள்.


Next Story

மேலும் செய்திகள்