இலையின் கோட்டையில் வீசிய சூரிய ஒளி.. பொள்ளாச்சியில் 39 ஆண்டுக்கு பின் திமுக கால் வைத்த வரலாறு

x

இலையின் கோட்டையில் வீசிய சூரிய ஒளி

39 ஆண்டுக்கு பின் கால் வைத்த வரலாறு

அதிமுகவை வீழ்த்திய ஒற்றை சம்பவம்?

புரட்டி போட்ட 2019.. என்ன செய்யும் 2024?

நெருங்கி வரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரம் காட்டும் சூழலில், இன்றைய உங்கள் தொகுதி, உண்மை நிலவரம் பகுதியில் பொள்ளாச்சி தொகுதி குறித்து விரிவாக காணலாம்...

விண்ணைமுட்டும் மலைகள்...பசுமை போர்த்திய காடுகள் என இயற்கை எழில் கொஞ்சும், தென்னைகள் சாமரம் வீசும் குளிர்ச்சியான தொகுதி பொள்ளாச்சி....

இளநீருக்கு பெயர்போன பொள்ளாச்சி... வால்பாறை... ஆழியாறு அணை... டாப்சிலிப் புல்வெளி... பேரூர் பட்டீஸ்வரர் கோயில், மாசாணியம்மன் கோயில், பேரூர் ஆதீனம் சிறப்பு பெற்றவை.

தென்னை, திராட்சை, நிலக்கடலை, மக்காசோளம், காய்கறிகள், தேயிலை என விவசாயத்தோடு... தென்னை நார், மெத்தை தயாரிப்பு சார்ந்த தொழில்களும் மக்கள் வாழ்வாதாரமாக இருக்கிறது.

தமிழகத்தில் அதிகம் தேங்காய் விளையும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

7,66,077 ஆண் வாக்காளர்கள், 8,15,428 பெண் வாக்காளர்கள், 290 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 15,81,795 வாக்காளர்கள் தொகுதியில் உள்ளனர்.

கொங்கு மண்டல தொகுதி வரலாற்றை பார்க்கையில்... அதிக முறை அதிமுகவே வென்றுள்ளது.

1951 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜி.ஆர் .தாமோதரன் வெற்றிப்பெற்றார். 1957 தேர்தலில் காங்கிரசை சேர்ந்த பி.ஆர். ராமகிருஷ்ணன், 1962 தேர்தலில் காங்கிரசை சேர்ந்த சி. சுப்பிரமணியம், 1967 தேர்தலில் திமுகவை சேர்ந்த நாராயணன் வெற்றிப்பெற்றனர். 1971 தேர்தலிலும் அவரே வெற்றிப்பெற்றார். அந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவின் காளிங்கராயன் வென்றார்.

1977 தேர்தலில் அதிமுகவின் கே.ஏ.ராஜுவும், 1980 தேர்தலில் திமுகவின் சி.டி.தண்டபாணியும் வென்றனர். 1984 தேர்தலில் அதிமுகவின் ஆர்.அண்ணாநம்பி, 1989 தேர்தலில் அதிமுகவின் பி.ராஜா ரவிவர்மா, 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசின் வி.கந்தசாமி, 1998 தேர்தலில் அதிமுகவின் தியாகராஜன் வெற்றியை வசமாக்கினர். 1999 மற்றும் 2004 தேர்தல்களில் மதிமுகவை சேர்ந்த சி.கிருஷ்ணன் வெற்றியை வசமாக்கினார். தொடர்ந்து 2009 தேர்தலில் அதிமுகவை சேர்ந்த கே.சுகுமாரும், 2014 தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சி.மகேந்திரனும் வென்ற நிலையில், 2019 தேர்தலில் திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் தொகுதியை வசமாக்கினார்.

2019 தேர்தலில் தொகுதியில் 5,54,230 வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றார் சண்முகசுந்தரம். அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன் 3,78,347 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை 59,693 வாக்குகளையும், நாம்தமிழர் வேட்பாளர் சனுஜா 31,483 வாக்குகளையும் பெற்றிருந்தனர். அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை 1,75, 883 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தார் சண்முகசுந்தரம்...

39 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி தொகுதியை வசமாக்கியிருந்தது திமுக... தேர்தலின் போது... ஆனைமலை நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை, பொள்ளாச்சியில் இருந்து அனைத்து பெருநகரங்களுக்கும் ரயில் சேவை தொடங்க நடவடிக்கை, பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை... கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை, வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருந்தார் சண்முகசுந்தரம். கொப்பரை தேங்காய் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். தொகுதியில்... கல்வி உதவி, மருத்துவ உதவி, சிறு குறு தொழிலுக்கு கடன் உதவி என பல்வேறு உதவிகளை செய்வதாக ட்விட்டரில் தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்