ஐரோப்பாவுடன் மோதும் USA.. போரை தூண்டும் அதிபர் டிரம்ப்? - உலக வரலாற்றில் உக்கிரமாகும் மோதல்
கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுவது நிச்சயம் என்று டிரம்ப் சொல்லும் வேளையில், கிரீன்லாந்து விவகாரத்தில் இப்போது நடப்பது? என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு
அமெரிக்கா பாதுகாப்புக்கு கிரீன்லாந்து எங்களுக்கு வேண்டும்... கிரீன்லாந்து அமெரிக்காவோடு இருந்தால் அங்கிருக்கும் மக்கள் பயன் அடைவார்கள் என்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இதற்கு டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், கிரீன்லாந்தை அடைவதில் மிக உறுதியாக இருக்கிறார் டிரம்ப்.
டிரம்ப் அடைய துடிக்கும் கிரீன்லாந்து, பூகோள ரீதியாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவிற்கு மத்தியில் இருப்பதால், பாதுகாப்பு மற்றும் வர்த்தக நோக்கங்களுக்கு முக்கிய இடமாக விளங்குகிறது.
கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் நடவடிக்கையை மிக உன்னிப்பாக கவனிக்கிறது ரஷ்யா.
கிரீன்லாந்தில் ஏற்கனவே அமெரிக்க ராணுவ நிலைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எச்சரிக்கை மையம் இருக்கிறது.
காண்போரை கவரும் பனித்தீவு,1953 முதல் டென்மார்க்கின் ஒரு தன்னாட்சி பிராந்தியமாக இருக்கிறது. 57 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட கிரீன்லாந்தில் சுதந்திர கோரிக்கையும் இருக்கிறது. பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்ற பகுதி, எண்ணெய், தாதுக்கள், அரிய கனிம வளங்கள் குவிந்து கிடைக்கிறது.
டிரம்ப் ஆசைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல, நாங்கள் ஒரு அமெரிக்கராக இருக்க விரும்பவில்லை என்கிறார். கிரீன்லாந்து மக்கள் கருத்தும் அதுவாகவே இருக்கிறது.
இதற்கிடையே கிரீன்லாந்துக்கான பாதுகாப்பு ஒதுக்கீடை அதிகரித்துள்ளது டென்மார்க்.
அரசு லட்சினையை மாற்றி, கிரீன்லாந்து மற்றும் ஃபாரோஸ் தீவுகளை குறிக்கும் வகையில் அதில் துருவ கரடி மற்றும் ஆட்டுக்குட்டியை சிறப்பித்து காட்டியிருக்கிறது.
இது கிரீன்லாந்து மீதான பிடியை இழந்துவிடக்கூடாது என்பதில் டென்மார்க் உறுதியாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.
டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரடெரிக்சென்னுடன் (Mette Frederiksen) தொலைபேசியில் பேசியிருக்கும் டிரம்ப், கிரீன்லாந்தை வாங்குவது குறித்து பேசியதாகவும், ஆனால் டென்மார்க் பிரதமர் அதனை நிராகரித்துவிட்டார் என்றும் தெரியவந்துள்ளது.
தீவை வாங்க டிரம்ப் விடாப்பிடியாக இருப்பதாகவும், அவரது செயல் பயங்கரமாக இருக்கிறது எனவும் டென்மார்க் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த சூழலில் டென்மார்க் பாதுகாப்பு நடவடிக்கையை, 2 நாய் சவாரி ரோந்தால் பாதுகாப்பை கொடுத்துவிட முடியுமா? என கேலி செய்து, கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் என கூறியிருக்கிறார் டிரம்ப். இப்போது கிரீன்லாந்து மீதான டிரம்ப் ஆசை டென்மார்க்கை நெருக்கடியில் தள்ளியிருக்கிறது.
