இந்தியா மீது அபாண்டமான பழி சுமத்தி கொடூர பாலிட்டிக்ஸ் செய்யும் டிரம்ப்
இந்தியா அதிக அளவில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கி வெறும் லாபத்திற்கு திறந்த சந்தையில் விற்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என தரவுகளை குறிப்பிட்டு, சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பான GTRI நிறுவனர் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து சீனாவே அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவரும் நிலையில்,
அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவை விமர்சிக்க விரும்பாமல் இந்தியாவை நியாயமற்ற முறையில் குறி வைப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஒருவேளை இதற்கு புவிசார் அரசியல் கணக்கீடுகள் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ள அவர்,
கடந்த 2024 ஆம் ஆண்டு இந்தியாவின் 52.7 பில்லியன் டாலரை ஒப்பிடுகையில், சீனா ரஷ்யாவிடம் இருந்து 62.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ள ஜிடிஆர்ஐ,
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை உள்ளடக்கிய இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கச்சா எண்ணெயை ரஷ்யா அல்லது வேறு எந்த நாட்டில் இருந்தும் வாங்குவதற்காக அரசின் ஒப்புதல் பெறவேண்டிய தேவை இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் தடைகளால் உலகின் பாரம்பரிய கச்சா எண்ணெய் விநியோக சங்கிலிகள் சீர்குலைந்த போது, ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரித்தது உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை குறைக்க உதவியதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம் என அஞ்சப்படுவது குறிப்பிடத்தக்கது.
