"14000 குழந்தைகள் பலியாகும்" ஒரு செய்தியால் திரண்டு வந்த உலக நாடுகள் - ஒரேநாளில் மாறிய நிலை
நீண்ட போராட்டத்திற்கு பிறகு, காசாவுக்கு உதவி பொருட்கள் அடங்கிய 90 டிரக்குகளை ஐ.நா அனுப்பியுள்ளது. காசா மீது மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், உதவி பொருட்களையும் தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒருபக்கம் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில்களில் தொடரும் உயிரிழப்பு, மறுபக்கம் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் திண்டாடும் குழந்தைகள் என காசா மக்களின் கையறு நிலை உலகை உலுக்கியுள்ளது.
இதனிடையே, காசாவில் உடனடியாக மனிதாபிமான உதவிகள் சென்று சேராவிட்டால், ஏறக்குறைய 14 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என ஐ.நா. சபை எச்சரித்திருந்தது. இதனை அடுத்து, சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்ததால், காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதித்துள்ளது.
அதன்படி, சுமார் 2 மாதங்களுக்கு பிறகு, முதற்கட்டமாக உணவு, மருந்து உள்ளிட்ட உதவிப் பொருட்கள் அடங்கிய 90 டிரக்குகளை காசாவுக்கு ஐ.நா. அனுப்பியது. இதில் 87 டிரக்குகள் காசா வந்தடைந்ததை ஹமாஸ் அரசாங்க ஊடக அலுவலகம் உறுதி செய்துள்ளது. இதேபோல், காசா மீதான முற்றுகையை தளர்த்தவும், தொடர் தாக்குதல்களை நிறுத்தவும் இஸ்ரேலுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன.
