குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் உயிர்வாழ உதவியது என்ன? - புதிய தகவல்

குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் உணவு இன்றி 18 நாட்கள் எப்படி உயிர் வாழ்ந்தார்கள்?
குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் உயிர்வாழ உதவியது என்ன? - புதிய தகவல்
Published on

குகைக்குள் 12 சிறுவர்களும்,பயிற்சியாளர் எகாபோலும், சிக்கிக்கொண்டபோது, அவர்களிடம் ஓரிரு நாட்களுக்குத் தேவையான உணவுகள் மட்டுமே கைவசம் இருந்துள்ளது. போதுமான அளவிற்கு காற்றும், சுத்தமான குடிநீரும் இல்லாத நிலையிலும் அவர்கள் 18 நாட்கள் உயிர் வாழ்ந்துள்ளனர்.பயிற்சியாளர் எகாபோல், சிறுவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் நேராமல் பாதுகாத்ததாக மீட்பு குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.சிறுவர்களுடன் மிகவும் ஆபத்தான குகைக்குள் சிக்கிக்கொண்டோம், அதோடு மழையும் சேர்ந்து பெய்கிறது என்பதை அறிந்தவுடன், எகாபோல் கைவசம் இருந்த உணவை பகிர்ந்து கொடுத்து ஒரு சில நாட்கள் அவர்களை காப்பாற்றியுள்ளார்.

உணவுப்பொருட்கள் தீர்ந்தவுடன் தியானத்தின் மூலம் உடலில் சக்தியை எப்படிச் சேமிப்பது என்பதை சிறுவர்களுக்கு அவர் கற்றுக் கொடுத்துள்ளார்.தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி, சிறுவர்களை ஒரே இடத்தில் பெரும் பகுதி நேரம் அமர வைத்து, அவர்களின் சக்தி செலவாகமலும், சோர்வடையாமலும் அவர் பாதுகாத்துள்ளார்.இதனால்தான் 15 நாட்களுக்கு மேல் உணவில்லாமல் அவர்களால் உயிர் வாழ முடிந்தது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட இந்திய நிறுவனம் உதவி

குகையின் உள்ள சிறுவர்களை மீட்கும் பணிக்கு இந்திய நிறுவனம் ஒன்று உதவியுள்ளது. மீட்பு பணிகளின் போது குகையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற இந்தியாவை சேர்ந்த கிர்லோஸ்கர் மோட்டார்களை பயன்படுத்தலாம் என்று இந்திய தூதரகம், மீட்பு குழுவினரிடம் பரிந்துரை செய்துள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் உள்ள அந்த நிறுவனம் சார்பில் அதிக திறன் கொண்ட மோட்டார்களை அதிகாரிகள் ஜூலை 5ம் தேதி தாய்லாந்துக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோட்டார்கள் மூலம் மீட்புக்குழு குகைக்குள் சென்ற பாதையில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குகையில் இருந்து 13 பேர் மீட்கப்பட்ட விவகாரம் : தாய்லாந்து

மீட்புக்குழுவுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

குகையில் இருந்து 13 பேர் மீட்கப்பட்டதற்கு,அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது அழகான தருணம் எனவும், மீட்பு குழுவின் மிகப்பெரிய வேலை இது என்றும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அந்த நிகழ்வை உலகம் பார்த்துக் கொண்டிருந்தது,சம்பந்தப்பட்ட அனைவரின் துணிச்சலுக்கும் வணக்கம் என்று இங்கிலாந்து பிரதமர் தெரசாமே குறிப்பிட்டுள்ளார்.இது மறக்கமுடியாத சம்பவம் எனவும், மனித ஆற்றலின் சக்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com