அமெரிக்காவில் பேரதிர்ச்சி - குழந்தைகள் உட்பட பல உயிர்களை காவு வாங்கிய இயற்கை சீற்றம்
டெக்சாஸில் திடீர் வெள்ளம்...15 குழந்தைகள் உட்பட 50 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் Texas மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 15 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்த நிலையில், ஆற்று வெள்ளம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய டெக்சாஸ் பகுதியில் கனமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, குவாடலூப் ஆற்றில் Guadalupe River ஏழு அடியாக இருந்த நீர்மட்டம், கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்தில், சுமார் 29 அடி வரை உயர்ந்தது தெரியவந்துள்ளது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஆற்றையொட்டிய ஒரு முகாமில் இருந்த சிறுமிகள் உட்பட பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி 15 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் மாயமானதால் தேடுதல் பணியில் மீட்புக்குழுவினர்
மற்றும் ஹெலிகாப்டர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் வெள்ளம் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடுவதால், வெள்ள எச்சரிக்கை அமலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் குறித்து அதிகாரிகள் முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை என்றும், இதனால் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.