மோடி முதல் ஒபாமா வரை - டுவிட்டரில் சரிவை சந்தித்த பிரபலங்கள்!

ஒரே நாளில் 3 லட்சம் பின் தொடர்பாளர்களை இழந்துள்ளார் பிரதமர் மோடி
மோடி முதல் ஒபாமா வரை - டுவிட்டரில் சரிவை சந்தித்த பிரபலங்கள்!
Published on

போலியான மற்றும் சந்தேகத்திற்குரிய கணக்குகளை ஒழிக்க டுவிட்டர் நிறுவனம் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளால் பல பிரபலங்களின் டுவிட்டர் பின் தொடர்பாளர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் மள மளவென சரிந்துள்ளது.

கடந்த புதன் கிழமை அந்நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையால், பிரதமர் மோடியின் டுவிட்டர் பின் தொடர்பாளர்களில் சுமார் 3 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். பாரத பிரதமரின் அதிகாரப்பூர்வ கணக்கான @PMOIndia 1 லட்சத்து 40 ஆயிரம் பேரை இழந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 17,000 பின் தொடர்பாளர்களையும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் 1.5 லட்சம் பின் தொடர்பாளர்களையும் இழந்துள்ளனர்.

திரை பிரபலங்களுக்கும் இதே நிலை தான். பாலிவுட் நடிகர்கள் அபிதாப் பச்சன் - 4.2 லட்சம், சல்மான் கான் - 3.4 லட்சம், ஷாரூக் கான் - 3 லட்சம், அமீர் கான் - 3 லட்சம் என பின் தொடர்பாளர்களை இழந்துள்ளனர். தமிழில், நடிகர் ரஜினிகாந்திற்கு 23,000 பேர், கமலஹாசனுக்கு 13,500 பேர் குறைந்துள்ளனர்.

சர்வதேச தலைவர்கள் கூட தப்பவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 5.3 கோடி பின் தொடர்பாளர்களில், சுமார் 4 லட்சம் குறைந்துள்ளனர். முன்னாள் அதிபர் ஒபாமாவோ, தனது 10 கோடி பின் தொடர்பாளர்களில், கிட்டத்தட்ட 25 லட்சம் பேரை இழந்துள்ளார்! இவ்வளவு ஏன், டுவிட்டரின் நிறுவனராக ஜாக் டோர்சியே 2 லட்சம் பின் தொடர்பாளர்களை இழந்துள்ளார்.

இப்படி நீக்கப்படும் கணக்குகள் எல்லாம் போலியா? என்ற கேள்விக்கு குழப்பமான பதிலை தருகிறது டுவிட்டர் நிறுவனம். பல ஆண்டுகளாக செயல்பாடு இல்லாத, அல்லது சந்தேகத்திற்குரிய செயல்பாடு கொண்ட சில கணக்குகளை முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த கணக்குகள் தற்போது பின் தொடர்பாளர்கள் எண்ணிக்கையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன என்கிறது டுவிட்டர். இந்த கணக்குகள் நிஜ மனிதர்களால் தொடங்கப்பட்டவை தான் என்றும், ஸ்பேமோ, Bot எனப்படும் இயந்திர கணக்குகளோ இல்லையென்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com