செவ்வாய் கிரகத்தில் உயிர்களா.. தென்பட்ட DNA வேதிப்பொருள்.. உலகையே வாய் பிளக்கவிட்ட நாசா
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததா என்பது குறித்து நாசா புதிய தகவல் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக, செவ்வாய் கிரகத்தில் இதுவரை கண்டறியப்படாத பல புதிய கரிம சேர்மங்களை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். செவ்வாயின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள உலர்ந்த ஏரிப்படுகையில் இருந்து எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததில், கார்பன் அணுக்களால் ஆன 7 வகையான சிக்கலான கரிம சேர்மங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 மூலக்கூறுகள் செவ்வாய் கிரகத்தில் முதல்முறையாகக் கண்டறியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பூமியில் உயிரினங்களின் மரபணுவான டிஎன்ஏ உருவாவதற்கு அடிப்படையாக இருக்கும் வேதிப் பொருட்களைப் போன்ற அமைப்புகள் அங்கு தென்பட்டுள்ளன. இவை உயிரியல் ரீதியாக உருவானவையா அல்லது புவியியல் மாற்றங்களால் உருவானவையா என்பது குறித்துத் தொடர் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த முக்கிய கண்டுபிடிப்பு, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகம் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலில் இருந்திருக்கலாம் என்ற ஆதாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
