

எந்தவொரு நோய்க்கான புதிய மருந்தை கண்டுபிடித்தாலும், அதனை முதல் முதலில் எலிகள் மீது செலுத்திய பிறகே மருந்தின் பாதுகாப்பு தன்மை உறுதி செய்யப்படும்.. இதுதான் மருந்துவ ஆராய்ச்சியின் அடிப்படை விதியும் கூட இப்படி இருக்கையில், எலிகளின் பற்றாக்குறையால் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர், ஆராய்ச்சியாளர்கள்... "வீட்டில் எலி தொல்லை தாங்காமல் , எலியை விரட்டியடிக்க படாத பாடு படுகிறோம்... இப்படி இருக்கையில் எலிக்கா பஞ்சம்" என்று நாம் நினைக்கலாம்... அப்படி எல்லா எலிகளையும் உடனடியாக ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது என்பதே இதில் உள்ள சிக்கல்.. ஏசிஇ2 எனப்படும் மனிதமயமாக்கப்பட்ட மரபணுவுடன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலிகளில் மட்டும் தான் கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியும்...மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகளை வழங்கும் அமைப்புகளில் 11 ஆயிரம் வகையான எலிகள் இருந்த போது, ஏசிஇ2 எலிகள் இல்லாததால் ஆராய்ச்சியை தொடர முடியாமல் முடங்கியுள்ளனர், ஆராய்ச்சியாளர்கள்...சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு பிறகு புற்றுநோய், ஹெபாட்டிஸ் போன்ற பிற நோய்களுக்கான புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டதால், ஏசிஇ2 எலிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏசிஇ2 எலிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், மறுபுறம் முயல், பன்றி போன்ற விலங்கினங்கள் கொண்டு ஆராய்ச்சியை தொடரவும் முடிவு செய்துள்ளனர்.
இப்படி கொரோனாவுக்கான மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் போராடி வரும் நிலையில், மனித உயிர்களை காப்பது எலிகளின் கையில் உள்ளது.