BRICS | அமெரிக்காவுக்கு செக் வைக்க இந்தியா பிளான்?-உலக வர்த்தகத்தையே புரட்டி போடும் ஐடியா
அமெரிக்காவுக்கு செக் வைக்க பிள்ளையார் சுழி போட்ட இந்தியா? - உலக வர்த்தகத்தையே புரட்டி போட போகும் ஐடியா...
எல்லைத் தாண்டிய வர்த்தகத்திற்கு பிரிக்ஸ் நாடுகளின் டிஜிட்டல் கரன்சியை ஒருங்கிணைக்க இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கிய வர்த்தகப்போரை தொடர்ந்து, பாதிக்கப்படும் நாடுகள் தங்களுடைய வர்த்தகத்தை பிற நாடுகளுக்கு திருப்புவதை தீவிரமாக்கிவிட்டன.
இந்தியாவை பொறுத்த வரையில் ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சந்தையை குறிவைத்து வரியில்லா ஒப்பந்தங்களை விஸ்தரிக்கிறது. மறுபுறம் இன்றைக்கு உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது.
உலக நாடுகள் தங்களது நாணயத்தை அமெரிக்க டாலராக மாற்றி "டாலரில் வர்த்தகம்" செய்து வருகின்றன. இப்போது வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதை தவிர்க்கவும் உலக நாடுகள் தயாராகிவிட்டன.
இதற்காகவே உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை அதிகரித்து வருகின்றன.
இந்த சூழலில் எல்லைத் தாண்டிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா பயண கட்டணங்களுக்காக பிரிக்ஸ் நாடுகளின் டிஜிட்டல் கரன்சியை ஒருங்கிணைக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு இறுதியில் 2026 பிரிக்ஸ் உச்சிமாநாட்டை இந்தியா நடத்துகிறது. இதற்கான நிகழ்ச்சி நிரலில் பிரிக்ஸ் நாடுகளின் டிஜிட்டல் கரன்சியை ஒருங்கிணைக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது ரஷ்யாவிடம் வாங்கும் பொருட்களுக்கு இந்தியா டிஜிட்டல் ரூபாயை கொடுக்கலாம். மறுபுறம் இந்தியாவிடமிருந்து வாங்கும் பொருட்களுக்கு ரஷ்யா டிஜிட்டல் ரூபிளை பயன்படுத்தலாம். இப்படி செய்யும் போது நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் எளிமையாகும்.
பிரிக்ஸ் நாடுகளில், இந்தியாவில் 2022-ம் ஆண்டே டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. சீனாவை பொறுத்த வரையில் டிஜிட்டல் யுவானை உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளதாக தெரிவித்திருக்கிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் பொருளாதாரம் உலக பொருளாதாரத்தில் 35% என கணிக்கப்படுகிறது.
இந்த சூழலில் பிரிக்ஸ் நாடுகள் டிஜிட்டல் கரன்சியை ஒருங்கிணைத்தால் வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலரை சார்ந்திருப்பது குறையும்.
ரிசர்வ் வங்கியை பொறுத்த வரையில் எல்லை தாண்டிய வர்த்தக பணப்பரிமாற்றங்களை விரைவாக்கவும், இந்திய ரூபாயின் பயன்பாட்டை உலகளவில் விரிவாக்கவும் இந்திய டிஜிட்டல் ரூபாயை மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளோடு இணைக்கும் வழிகளை ஆர்வாய்வதாக தெரிவிக்கிறது. அதேவேளையில் இந்த முயற்சி டாலரை மதிப்பிழப்பு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்பதையும் வலியுறுத்துகிறது.
பிரிக்ஸ் நாடுகள் டிஜிட்டல் கரன்சியை ஒருங்கிணைக்கலாம் என்பது நல்ல யோசனையாக இருந்தாலும், அமெரிக்காவிடம் இருந்து அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.
ஏற்கனவே பிரிக்ஸ் அமெரிக்காவுக்கு எதிரானது என சொல்லிவரும் டிரம்ப், அமெரிக்க டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் நாடுகள் கரன்சியை உருவாக்கினால் கூடுதல் வரிகளை விதிப்பேன் என மிரட்டி வருகிறார்.
உலக வர்த்தகத்திலிருந்து அமெரிக்க டாலர் விலகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் டிரம்ப்.
இந்த சூழலில்... பிரிக்ஸ் நாடுகள் டிஜிட்டல் கரன்சியை ஒருங்கிணைக்கலாம் என ரிசர்வ் வங்கி பரிந்துரை வழங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது
