கடல் மேலே பறக்கும் அதிசய கண்டுபிடிப்பு - வெறும் ரூ.600க்கு சென்னை டூ கொல்கத்தா டிராவல்...
கடல் மேலே பறக்கும் அதிசய கண்டுபிடிப்பு - வெறும் ரூ.600க்கு சென்னை டூ கொல்கத்தா டிராவல்... வியந்து போன ஆனந்த் மஹிந்திரா
சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு வெறும்
3 மணி நேரத்தில் 600 ரூபாயில் பயணம் செய்யும் புதிய போக்குவரத்து திட்டத்தை அறிவித்து அதிசயிக்க வைத்துள்ளது சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம். விரிவாக பார்க்கலாம் இந்தத் தொகுப்பில்...
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கும் சென்னைக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 1600 கிலோ மீட்டர். வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ள இரு நகரங்களும் தொழில் வளர்ச்சியில் மிகவும் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு சாலை மார்க்கமாக பயணித்தால் 30 மணி நேரமும், ரயில் மூலமாக சென்றால் குறைந்தபட்சம் 26 மணி நேரமும் ஆகிறது. மாறாக விரைவான விமான பயணத்திற்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருப்பதால் இன்றும் நடுத்தர மக்களின் தேர்வு ரயிலாகவே உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு
வெறும் 3 மணி நேரத்தில் சென்றுவிடலாம்... வெறும்
600 ரூபாய் மட்டுமே என்று ஆச்சரியமூட்டும் அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான Waterfly Technologies.
சென்னை ஐஐடி இன் நிதியுதவியின் கீழ் இயங்கும் இந்த
நிறுவனம், பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்தியா 2025
கண்காட்சியில் தங்களது கண்டுபிடிப்பினை அறிமுகப்படுத்தியது.
மின்சார SEA GLIDER - களை (கிளைடர்களை)பயன்படுத்துவதன் மூலம் மலிவான அதே நேரம் விரைவான பயணம் சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது.
பார்ப்பதற்கு சிறிய ரக விமானம் போல் இருக்கும், இவை தண்ணீரில் இருந்து புறப்பட்டு நான்கு மீட்டர் உயரத்தில் பறக்குமாம்.
இதன் மூலம் கொல்கத்தா - சென்னை இடையிலான
ஆயிரத்து 600 கி.மீ பயண தூரத்தை 600 ரூபாயில்
கடக்க முடியும் என்கின்றது இந்த நிறுவனம்.
இது ரயிலின் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியின் டிக்கெட் கட்டணத்தை விட மலிவானது.
இந்த சிறப்பு விமானம் நீரின் மேற்பரப்புக்கு மிக அருகில் பறக்கும். இதன் மூலம் இறக்கைகளில் உராய்வைக் குறைக்கிறது.
குறைந்த வேகத்தில் கூட பறக்க முடியும்.
உதாரணமாக, வழக்கமான ஏர்பஸ் A320 அல்லது போயிங் 737 விமானம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு பறக்க 2.5 முதல் 3 டன் வரை எரிபொருள் தேவைப்படுகிறது. இதன் தற்போதைய விலை கிலோ லிட்டருக்கு சுமார் 95 ஆயிரம் ரூபாய். வாட்டர்ஃபிளையின் Sea Glider-ஆல் (கிளைடரால்) இந்த செலவை கணிசமாகக் குறைக்க முடியும் என்பதால், மிகவும் மலிவு விலையில் டிக்கெட் கிடைக்கும் என்கின்றனர் நிறுவனர்கள்.
ஏரோ இந்தியா கண்காட்சியில், இந்த நீர்வழி விமானத்தின்
வடிவமைப்பு மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடுத்தகட்டமாக, 100 கிலோ எடையுள்ள மாதிரி வடிவம் அடுத்த சில மாதங்களுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 2025 இறுதிக்குள் ஒரு டன் எடைகொண்ட முன்மாதிரி பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் 2026-ம் ஆண்டுக்குள் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு பயணிக்கக்கூடிய 20 இருக்கைகள் கொண்ட சோதனை விமானத்தை தயாரித்து விடுவோம் என்றும்,
Waterfly Technologies நிறுவனம் கூறியிருப்பது எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இந்தக் கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளார். அவர் தனது சமூகவலைதளப் பதிவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தொழில்நுட்ப முயற்சி பற்றிய செய்திகள் வருகின்றன. இருப்பினும், தனக்கு இந்த கண்டுபிடிப்பு மிகவும் பிடித்திருப்பதாகவும், நம் நாட்டின் பரந்த நீர்வழிகளைப் பயன்படுத்துவதற்கான நோக்கம் மற்றும் வாகனத்தின் வடிவமைப்பு, சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
