

அதில், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸப் ஆகிய சமூக ஊடக நிறுவனங்களை வாங்கி, பேஸ்புக் ஒரு ஏகபோக நிறுவனமாக வளர்ந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஏகபோக வர்த்தக தடை சட்டங்கள் கடந்த 140 ஆண்டுகளாக அமலில் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு ராக்ஃபெல்லர் குடும்பத்தினருக்கு சொந்தமான ஸ்டாண்டர்ட் ஆயில் என்ற பெட்ரோலிய உற்பத்தி நிறுவனம் இந்த சட்டத்தின் கீழ், பல சிறிய நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது.
பெட்ரோல் விற்பனை சந்தையில் பெரும் பகுதியை இந்த நிறுவனம் கைபற்றி ஏகபோக நிறுவனமாக மாறியபோது, இந்த சட்டம் உருவாக்கப்பட்டு, அதன் மீது செயல்படுத்தப்பட்டது.
எந்த ஒரு துறையிலும், ஒரு பெரு நிறுவனம், மிக அதிக சந்தை பங்கை எட்டினால், அந்நிறுவனம் ஏகபோக நிறுவனமாக மாறி, போட்டி நிறுவனங்களை வளர விடாமல் செய்யும் நிலை ஏற்படுவதை தடுக்க, இந்த சட்டம் இயற்றப்பட்டது.
ஆனால் இந்த பழமையான சட்டங்கள், நவீன, இணைய தள தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுவதற்கு வெகு காலம் முன்பு உருவாக்கப்பட்டவை என்பதால், பேஸ்புக் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை இதை கொண்டு நிரூபிக்க முடியுமா என்பது தெரியவில்லை.
இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸப் நிறுவனங்கள் போட்டி நிறுவனங்களாக உருவெடுப்பதை தடுக்க, உள் நோக்கத்துடன் அவற்றை பெரும் விலை கொடுத்து பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது என்பதை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிப்பது கடினமான விஷயம் என துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர். வாட்ஸப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களை பேஸ்புக் வாங்கிய போது, அதை பற்றி அமெரிக்க வர்த்தக ஒழுங்குமுறை ஆணையம் முறைப்படி பரிசீலனை செய்து, அனுமதி அளித்திருந்தது.
அன்று அனுமதியளித்துவிட்டு, இப்போது ஏன் தங்களின் முடிவை அவர்கள் மாற்றிக் கொண்டனர் என்பதை அந்த அமைப்பு, நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். சமீப காலமாக பெருநிறுவனங்களை உடைத்து, சிறிய நிறுவனங்களாக மாற்றுவதற்கு நீதிமன்றங்கள் அனுமதியளிப்பதில் தயக்கம் காட்டி வருகின்றன. அப்படி உடைப்பது வாடிக்கையாளர்களுக்கு நன்மையளிப்பதை விட அதிக தீங்கு விளைவிக்கலாம் என்ற அச்சம் உள்ளதால், இதை நீதிமன்றங்கள் முன்னெடுப்பதில்லை.
மைக்ரோசாப்ட் நிறுவனம் மீது 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற குற்றச்சாட்டுகள், வழக்குகள் தொடுக்கப்பட்ட போது, சில கட்டுப்பாடுகளை மட்டுமே நீதிமன்றம் விதித்தது. கூகுள் நிறுவனம் மீதும் இத்தகைய வழக்குகள் நடந்து வருகின்றன. பேஸ்புக் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது கடினம் என்பதால், இந்த வழக்கில் வெற்றி பெறுவது சவால்கள் நிறைந்த காரியமாக உள்ளதாக அமெரிக்க ஏகபோக தடுப்பு ஆராய்ச்சி நிறுவன தலைவர் டையான மோஸ் தெரிவித்துள்ளார்.