

சர்வதேச அழகு ராணிப் போட்டியொன்றில் முதலிடம் பெற்ற பெண்ணின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் அவரது தலைமுடியில், திடீரென தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் அழகு ராணியை தேர்வு செய்யும், 'மிஸ் ஆப்பிரிக்கா-2018' போட்டி நைஜீரியாவில் நடைபெற்றது. இதில், கொங்கோ நாட்டைச் சேர்ந்த டோர்காஸ் கசின்டே முதலிடத்தைப் பெற்றார். அறிவிப்பு வெளியான போது, திடீரென டோர்காஸ் கசின்டேவின் தலைமுடியில் தீப்பற்றத் தொடங்கியது. அவரின் தலையில் தீ அதிகம் பரவ ஆரம்பித்த நிலையில், மேடையிலிருந்த ஊழியர் ஒருவர் ஓடி வந்து தீயை அணைத்தார். இந்த நிகழ்வில், கொண்டாட்டத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெடிகளிலிருந்தே இந்த தீப்பொறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், காயங்கள் எதுவுமின்றி டோர்காஸ் கசின்டே உயிர் தப்பியுள்ளார்.